யென்றுசொல்ல, உலுகன் சொல்படி நின்று - உலூகனென்னும் அந்தணன் கூறிய முறைப்படி நின்று, (தருமன்), அளித்த பின்னர் - (அக்கடமைகளை இறந்தார்க்குச்) செலுத்தியபின்பு; (எ - று.) - 'கண்ணன் பாண்டவர்களுடன் அத்தினாபுரிசென்று' என வருங்கவியோடு தொடரும். கற்புடைமங்கையர்க்கு மக்களினுங் கணவரே முக்கியமென்பது நூற்கொள்கை யாதலால், நீ உன் கணவர் வாழ்ந்ததற்காக மகிழ வேண்டுமேயன்றி மைந்தர் இறந்ததற்காக வருந்தலாகா தென்பான், இங்ஙனங் கூறினான். கொந்து - கொத்து; ஆகுபெயராய் மலரையுணர்த்திற்று. இனி கண் செவி வாய் மூக்கு என்ற உறுப்புக்கள் ஒவ்வொன்றும் மலர்போலிருத்தலால், அவற்றையுடைய முகம் பூங்கொத்துப் போன்றதெனக் கூறப்பட்டதென்பாருமுளர். 'தன்மன் கொந்தலருமுகம்' என்றதனால், கண்ணன்கூறிய சமாதான வார்த்தையைக் கேட்டுத் தருமபுத்திரன் சோகந் தணிந்தனனென விளங்கும். இனி தருமன் வினைப்பயனையுணர்ந்தவனாதலால்,எப்பொழுதும் முகமலர்ச்சி கொண்டிருந்தன னென்பதை விளக்குவதுமாம். கன்னன் - கர்ணன்; இப்பெயர் கர்ணகுண்டலங்களோடு பிறந்தமை பற்றியது: காதின்வழியே பிறந்ததனால் வந்தபெயரென்றுங்கூறுவர்; ஆதவனிட்டபெயருமாம். கர்ணம் - காது. அந்தமுறுகடன் - அந்திமக்கிரியை. 'கழித்தும்' என்றும் பாடமுண்டு. உலூகன் - ஒருபுரோகிதன்; பாண்டவர்களால் துரியோதனாதியரிடம் முதலில் தூதனாக அனுப்பப்பட்டவன். (248) 45.-திருதராட்டிரனதுபெருங்கோபம். அத்தினாபுரியதனிலைவருடன்சென்றரியுமந்தன்முன்னர்ப் பத்தியினாலிறைஞ்சிடமற்றெவர்கொலெனத்தருமன்முதற்பாலரென்ன வித்தகனுமாசிசொற்றுச்சதாகதிசேயினைத்தழுவ வேண்டுமென்ன அத்தனத்தூணளித்தருளத்தழுவிநெரித்தனன்றுகள்களாயதம்மா. |
(இ -ள்.) அரியும் - கண்ணபிரானும், ஐவருடன் - பஞ்சபாண்டவர் களுடனே, அத்தினாபுரியதனில் சென்று - அஸ்திநாபட்டணத்திற்போய், அந்தன் முன்னர் - பிறவிக்குருடனான திருதராட்டிரன் முன்னிலையில், பத்தியினால் இறைஞ்சிட - பக்தியோடு வணங்க, (அப்பொழுது திருதராட்டிரன்), எவர் கொல் என - (வணங்குபவர்) யாவரென்றுவினாவ, தருமன் முதல் பாலர் என்ன - (அதற்குக் கண்ணன்) 'தருமபுத்திரன் முதலிய குமாரர்கள்' என்றுகூற, வித்தகனும் - சதுரனான திருதராட்டிரனும், ஆசி சொற்று - (அவர்களுக்கு) ஆசீர்வாதஞ்சொல்லி, சதாகதி சேயினை தழுவவேண்டும் என்ன - 'வாயுகுமாரனான வீமனை (யான்) கட்டிக்கொள்ளவேண்டும்' என்று சொல்ல, அத்தன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணன், அ தூண் அளித்தருள - பெரியதோர் இருப்புத்தூணைக் கொணர்ந்துகொடுத்தருள, தழுவி நெரித்தனன் - (அதனைத்திருதராட்டிரன் வீமனென்று கருதி) அணைத்து நொருக்கினான்; (அம்மாத்திரத்தால்), துகள்கள் ஆயது - (அத்தூண்) பொடியாய்விட்டது; அம்மா - ஆச்சரியம்! (எ - று.) |