பக்கம் எண் :

26பாரதம்சல்லிய பருவம்

முரசு எழுதியகொடி நர அதிபனும் - பேரொலிசெய்கிற
முரசவாத்தியத்தின்வடிவத்தையெழுதிய கொடியையுடைய தருமராசனும்,-
கதிரின் ஏய் பரி தேரினும் கடிய - ஏழுகுதிரைகளையுடைய சூரியனது
தேரைக்காட்டிலும் விரைவுள்ள, தன்கவனம்மான் தேர் - விரைந்த
நடையையுடைய குதிரைகள் பூட்டிய தனது தேரை, எதிர் கடவி -
எதிரிலேசெலுத்தி,-தொடி தட கையினில் பிடித்த வில் குனித்து -
தொடியென்னும் வளையையணிந்த பெரிய தனது கையிற்பிடித்த வில்லை
வளைத்து,-முதிர மேல் வரும் கணைகளை - மிகுதியாகத் தன்மேல் வருகிற
(சல்லியனது) அம்புகளை, கணைகளால் - (தனது) அம்புகளால், முனைகொடு
முனை - நுனியால் நுனி, கார் கொள் விசும்பில் பிதிர் படும்படி - கருநிறங்
கொண்ட ஆகாயத்திலே பொடியாய் விடும்படி, தொடுத்தனன்-; (எ - று.)

     தனதுஅம்புகளால் எதிரியின் அம்புகளைத்தாக்கித் தனது
அம்புமுனையைக்கொண்டு எதிரியின் அம்புமுனையை வழியிடையிலேயே
பொடியாக்கும்படி அம்புசெலுத்தின னென்பதாம்.                (22)

23.அவர்கள்தேர் நெருங்கியதைஇதில் வருணிக்கிறார்.

கொடிஞ்சி மானெடுந் தேர்களிற் பூட்டிய குரகதக்குரம்படப்பட
                                               மண்,
இடிஞ்சுமேலெழு தூளிமுற்பகல்வருமிரவினை நிகர்த்ததவ்விரவு,
விடிஞ்சதாமெனப் பரந்ததத் தேர்களின் மின்னியமணிகளின்
                                        வெயில்போய்ப்,
படிஞ்சதூளியோர் நடம்பயிலரங்கினிற் பரப்பிய
                                     வெழினிபோன்றதுவே.

     (இ -ள்.) கொடிஞ்சி - கொடிஞ்சியென்னுமுறுப்பையுடைய, மால் -
பெரிய, நெடு - உயர்ந்த, தேர்களில் -(அவ்விருவருடைய) இரதங்களில்,
பூட்டிய - பூட்டப்பட்டுள்ள, குரகதம் - குதிரைகளின், குரம் - குளம்புகள்,
படபட - மேற்படுந்தோறும், மண் இடிஞ்சு - தரை இடிபடுதலால், மேல் எழு
-மேலே கிளம்புகிற, தூளி - புழுதி, முன் பகல் வரும் இரவினை நிகர்த்தது-
பகற்பொழுதுக்குமுன்னே வருகிற இராத்திரியைப் போன்றது; அ இரவு
விடிஞ்சது ஆம் என - அந்த இராப்பொழுது கழிந்து சூரியோதயமானது
போல, அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் - அந்தத்தேர்களிலே
விளங்குகிற இரத்தினங்களின் வெவ்விய ஒளி, பரந்தது - பரவிற்று; போய்
படிஞ்ச தூளி - (அவ்விரத்தினங்களின்மேற்) சென்றுபடிந்த புழுதி, ஓர் நடம்
பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றது - கூத்தாடுமிடத்திற் பரப்பப்பட்டதொரு திரைச்சீலையை யொத்தது;  (எ - று.)

     முதல்வாக்கியத்தில்- இருட்சியையுண்டாக்கும் புழுதிக்கு
இருட்பொழுதான இராத்திரியையும், இரண்டாம் வாக்கியத்தில் -
அப்புழுதியின்அடர்த்தியாலான இருட்சி தேர்களின் இரத்தினகாந்தியால்
நீங்கினமைக்குச்சூரிய காந்தியால் இருள் ஒழிதலையும், மூன்றாம்
வாக்கியத்தில் - பின்புஅவ்விரத்தினங்களின் மேற்படிந்த புழுதிக்கு
நர்த்தனசாலையில் மறைவுக்காகஇடப்படும் கரியதிரைச் சீலையையும்
உவமைகூறினாரென அறிக. உவமையணி. கொடிஞ்சி - தேரினுறுப்பு. 
குரகதம் - (ஒற்றைக்)குளம்புகளால் செல்வது.                   (23)