இதுமுதல் ஆறுகவிகள் - மூன்றாஞ்சீர்ஒன்று மாச்சீரும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள். (59) 60.-வீமன் துரியோதனன்மேல்அம்பு தொடுத்தல். காமனைச்சம்பரன்கனன்றபோரென வீமனைப்போர்செய்துவெல்லமுன்னிய தீமனத்தரசனைச்சிலீமுகங்களின் மாமுனைப்படுத்தினன்மறித்துவீமனே. |
(இ -ள்.) காமனை - மன்மதனை, சம்பரன் - சம்பராசுரன், கனன்ற - கோபித்து எதிர்த்துச்செய்த, போர்என - போர்போல, வீமனை போர்செய்து, வீமசேனனையெதிர்த்து யுத்தஞ்செய்து, வெல்ல முன்னிய - சயிக்கநினைத்த, தீமனத்து அரசனை - கொடிய எண்ணத்தையுடைய துரியோதனராசனை, வீமன்-, மறித்து - தடுத்து, சிலீமுகங்களின் - (தனது) அம்புகளால், மாமுனை படுத்தினன் - பெரிய போருக்கு உள்ளாக்கினான்; (எ - று.) சம்பரன் என்னும் அசுரன் மன்மதனிடத்துப் பகைமைகொண்டு அவனை யெதிர்த்துப் பலமுறைபொருது தோற்றதுமன்றிப் பின்பு அம்மன்மதனது அமிசமாகத் தோன்றிய பிரத்யும்நனை யெதிர்த்துப்போரிட்டு அவனால் அழிவடைந்தன னென்பது சரித்திரம். இவனைக்கொன்றதனால் மன்மதனுக்கு 'சம்பராரி' என்று ஒரு பெயர். இங்கு வீமனை யெதிர்த்துப் போர்தொடங்கிய துரியோதனனுக்குக் காமனை யெதிர்த்துப்பொருத சம்பரனை உவமை கூறியது, வெல்லக்கருதிய கருத்துச் சிறிதும் நிறைவேறாமல்எளிதிலழிதலை விளக்குதற் கென்க. காமன் - (யாவர்க்குங்) காமத்தை விளைப்பவன். (60) 61.-மூன்றுகவிகள் -துரியோதனனும் வீமனும்செய்யும் தொந்தயுத்தம். யாளிகளிரண்டெதிர்ந்திகலுமாறுபோன் மீளிகளிருவருங்குனித்தவில்லுமிழ் வாளிகளிருவர்தம்வடிவிற்பாயுமுன் தூளிகள்பட்டனதுணிந்துவானிலே. |
(இ -ள்.) யாளிகள் இரண்டு - இரண்டு சிங்கங்கள், எதிர்ந்து - (ஒன்றோடொன்று) எதிர்த்து, இகலும் ஆறு போல்-போர் செய்யும் விதம்போல,மீளிகள் இருவரும் - பலசாலிகளான (துரியோதனன் வீமன்என்ற) இரண்டுபேரும், குனித்த- வளைத்த, வில்-விற்களினின்று, உமிழ் - வெளிப்படுத்தப்பட்ட, வாளிகள் - அம்புகள், இருவர்தம் வடிவில்பாயும்முன்- இவ்விருவருடைய உடம்புகளிற் பாய்தற்குமுன்னமே, வானிலே துணிந்து - ஆகாயத்தில்தானே துணிபட்டு, தூளிகள் பட்டன - பொடியாய்ச் சிதறின; (எ -று.) குறித்த இலக்கிற் படுமுன்னமே இடையிலே எதிரம்பு தாக்குதலால் இருவரம்புகளும் ஒன்றாலொன்று துணிபட்டுச் சிதறினவென்பதாம். (61) |