பக்கம் எண் :

52பாரதம்சல்லிய பருவம்

62.

தாண்முதன்முடியுறச்சரங்களேவியும்
வாண்முதற்படைகளான்மலைந்துமற்றவர்
தோண்முதலுறுப்பெலாஞ்சோரிகாலவே
நீண்முதற்றீபமேநிகருமாயினார்.

     (இ -ள்.) தாள் முதல் முடி உற - கால்முதல் தலைவரையிலும்,
சரங்கள்ஏவியும் - (ஒருவர்மேல் ஒருவர்) அம்புகளைச் செலுத்தியும், வாள்
முதல்படைகளால் - வாள் முதலிய ஆயுதங்களால், மலைந்தும் -
போர்செய்தும்,அவர் - அவ்விரண்டுபேரும், தோள்முதல் உறுப்பு
எலாம்சோரி கால - தோள்முதலிய அவயவங்களிலெல்லாம் இரத்தம் வழிய,
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்-நீண்டபிழம்பையுடைய
விளக்குப்போன்றவர்களுமானார்கள்;(எ -று.)

    செந்நிறம்பற்றிய உவமை.  இனி, நான்காமடிக்கு - நீண்ட
அடியையுடைய சோதிவிருட்சம் போன்றனரென்றுமாம்.  அது, இரவில்
விளக்கொளிபோல் விளங்குதலால், இரவெரிமரமெனவும் படும்.  இனி, 'நீபம்'
எனப் பாடங்கொண்டு, நீண்ட தண்டையுடைய செங்கடப்ப மரம்
போன்றனரெனினுமமையும்.  பதினான்காம்போர்ச்சருக்கத்தில் "நீப மெங்கு
மலர்ந்தென மண்டு செந்நீர் பரந்திட நின்று முனைந்தெழு, பூபர்
தங்களுடம்புசிவந்தனர்" என்று வந்தது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. 
சொரிவதுசோரியெனக் காரணக்குறி.                    (62)

63.-வீமன் துரியோதனனதுகுதிரை முதலியவற்றை யழித்தல்.

வன்பரிபாகுதேர்மதிநெடுங்குடை
மின்பொழிகணையுமிழ்வில்விலோதனம்
என்பனயாவையுமிற்றுவீழுமாறு
ஒன்பதுபடியமருடற்றினானரோ.

     (இ -ள்.) (துரியோதனனது), வல் - வலிய, பரி - தேர்க்குதிரைகள்
நான்கும், பாகு - சாரதியும், தேர் - தேரும், மதி நெடு குடை - சந்திரன்
போன்ற பெரிய குடையும், மின் பொழி கணை உமிழ் வில் - மின்னல்
போன்றஒளியை மிகுதியாக வெளிப்படுத்துகிற அம்புகளைச் சொரிகிற
வில்லும்,விலோதனம் - கொடியும், என்பன யாவையும் - என்ற ஒன்பது
பொருள்களெல்லாம், ஒன்பது படி - ஒன்பதுவிதமாக, இற்று வீழும் ஆறு -
துணிபட்டுக் கீழ்விழும்படி, அமர் உடற்றினான் - போர் செய்தான், (வீமன்);
(எ - று.) -அரோ-ஈற்றசை.

    இப்பாட்டுக்கு எழுவாய் வீமனென்பது, வருங்கவியின்
முன்னிரண்டடியால் விளங்கும்.  ஒன்பதுபட என்றும் பாடம்.        (63)

64.-துரியோதனன் தோற்கச்சல்லியன் போர்க்கு வரல்.

இரணவித்தகனிவனெறிந்தவேலினான்
முரணுடைச்சுயோதனன்முதுகுதந்தபின்
அரணுடைப்படைக்கரசானமத்திரன்
மரணமிப்பொழுதெனவந்துமேவினான்.