'வேளின்' இன் - ஒப்புப்பொருளது. பகை - பகைவர்க்குப் பண்பாகுபெயர். (66) 67.-இருதிறத்துச்சேனையும்பொருதல். ஆடன்மாவுமலையொப்பனமதக்கரியுமாழிசேர்பவன மொத்த விரதத்திரளும், நாடுபோரிலரியொத்தவனிகத்திரளு நாலுபாலுமெழலுற்ற மருடற்றினர்கள், ஓடியோடியெதிருற்றவர் முடித்தலைகளூறிசோரியுததிக்கிடை விழுத்தினர்கள், கோடி கோடிதமரப்பறைமுழக்கினொடுகோடுகோடுகள்குறித்த விரு பக்கமுமே. |
(இ -ள்.) ஆடல் மாவும் - போர்வெற்றிக்கு உரிய குதிரைகளும், மலை ஒப்பன் - மலைபோல்வனவான, மதம் கரியும் - மதயானைகளும், ஆழி சேர் பவனம் ஒத்த இரதம் திரளும் - சக்கரங்கள் பொருந்திய காற்றுப் போன்ற தேர்களின் கூட்டங்களும், நாடு போரில் அரி ஒத்த - (பகைவரைத்) தேடிச் சென்று செய்யும் போரிற் சிங்கங்களைப் போன்ற, அனிகம்திரளும் - காலாட் சேனைக்கூட்டமும், (ஆகிய நால்வகைப்படைகளிலு முள்ளவர்கள்), நாலு பாலும் எழல் உற்று - நான்குபக்கங்களிலும்எழுந்து, அமர்உடற்றினர்கள் - போர்செய்தார்கள்; (செய்து), ஓடி ஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் - மிகுதியாய் ஓடி வந்து எதிர்த்த வீரர்களது கிரீடமணிந்த தலைகளை, ஊறு சோரி உததிக்கு இடை விழுத்தினர்கள் - பெருகுகிற இரத்தக்கடலுக்கு இடையிலே துணித்துத் தள்ளினார்கள்; (அப்பொழுது), கோடி கோடி - மிகப்பலகோடிக்கணக்கான, தமரம் பறை - ஆரவாரத்தையுடைய போர்ப்பறைகளின், முழக்கினொடு - பேரொலியுடனே, கோடு கோடுகள் - வளைந்த சங்குகள், இரு பக்கமும் குறித்த - இரண்டு பக்கங்களிலும் ஊதப்பட்டன; (எ - று.) தேர்ச்சக்கரங்களோடு விரைந்துசெல்லுதலால், அதற்கு, சக்கரங்கள் பொருந்தியதொரு காற்றை இல்பொருளுவமையாகக் கூறினார். பவனம் என்பதற்கு - பூமி எனக்கொண்டு, தட்டின்பரப்பாற் பூமியையொத்த இரதத்திரள்என்றாருமுளர். இனி, 'ஆழிசேர்' என்றதை இரதத்துக்கு அடைமொழியாக்கலும் ஒன்று, உததி - நீர்தங்குமிடமெனக் காரணப் பொருள்படும்; உதம் = உதகம்: ஜலம். கோடிகோடி - மிகப்பல என்ற மாத்திரமாய் நிற்கும். கோடுகோடு - வினைத்தொகை: கோடுதல் - வளைதல். அலையொப்பன எனப் பிரித்து, அலைபோல்வன என்று உரைத்துக் குதிரைக்குஅடைமொழியாக்கினும் அமையும். (67) 68.-அப்போரின் சிறப்பு. ஆனபோதிருதளத்தினுமிகுந்தவிறலாண்மைவீரரொருவர்க் கொருவர்மெய்க்கவச, மானமேயெனநினைத்துவரிபொற்சிலையும்வாளும் வேலுமுதலெத்திறவிதப்படையும், மேனியூடுருவவெட்டியநிலைக்கு வமைவேறு கூறவிலதெப்படிமலைத்தனர்கள், தானவானவர்கள்யுத்தமுமரக்கரொடு சாகைமாமிருகயுத்தமு நிகர்த்தனவே. |
|