மன்மதன் எய்யும் அம்புகள்போலக் குறித்த இலக்குத்தவறாமற்பட்டுத் துளைக்குந் தரும னம்புகளென்பார், அவற்றை உவமை கூறினார், இமைப்பு, வியப்பு - இமைப்பொழுதுக்கும், வியக்கத் தக்க குணத்துக்குந் தொழிலாகுபெயராய் நின்றன. மாரன் - (பிராணிகளைக் காமநோயால்) மரணவேதனைப்படுத்துபவன்; காரணப் பெயர், மிக்க இருளைத் தவறாமல் எளிதில் அழிக்குஞ் சூரியன்போல மிக்க பகையைத் தவறாமல் எளிதில் அழிப்பவன் சல்லிய னென்றார். மிகுந்து என்பது, சந்தவின்பம் நோக்கி 'மிகுத்து' எனவலித்தது. தாமரைமலர், அசோக மலர், மாமலர், மல்லிகைமலர், நீலோற்பலமலர் என்னும் ஐந்தும், மன்மதனது பஞ்சபணங்களாம். 'யாறு போல் பெருக' என்பதில், சந்தவின்பத்துக்காக லகரம் இயல்பாய் நின்றது. (70) 71.- சல்லியன் தருமனது கவசம்முதலியவற்றைத் துணித்தல். ஆரவாரமுரசக்கொடியுயர்த்தவன தாகமீதணிமணிக்கவசமற்று விழ, ஊருநேமியிரத்துவயிரச்சுடைய வோடுவாசிதலையற்றிருநிலத்துருள, நேரிலாவலவனெற்றிதுளைபட்டுருவ நீடுநாணொடுபிடித்தகுனிவிற்றுணிய, ஈரவாய்முனைநெருப்புமிழ்வடிக்கணைக ளேவினானொரு நொடிக்குளெதிரற்றிடவே. |
(இ-ள்.) ஆரவாரம் - பெருமுழக்கத்தையுடைய, முரசம் - பேரிகை வாத்தியத்தின் வடிவத்தையெழுதிய, கொடி - துவசத்தை, உயர்த்தவனது - உயரநாட்டியுள்ளவனான தருமனது, ஆகம்மீது-உடம்பின்மேல், அணி -அணியப்பட்டுள்ள, மணி கவசம் - இரத்தினம்பதித்த கவசம், அற்று விழ - துணிபட்டு விழும்படியாகவும், ஊரும் - உருண்டுசெல்கிற, நேமி - சக்கரங்களையுடைய, இரதத்து - தேரினுடைய, வயிர் அச்சு - உறுதியான அச்சாணி, உடைய - துணிபட்டு உடையவும், ஓடு வாசி - விரைந்துவருந் தேர்க்குதிரைகள், தலை அற்று - தலையறுபட்டு, இரு நிலத்து உருள - பெரியபூமியிலே உருளவும், நேர் இலா - ஒப்பில்லாத, வலவன் - சாரதி, நெற்றி-, துளை பட்டு உருவ - (அம்பினால்) துளைக்கப்பெற்று ஊடுருவிப்படவும், (தருமன்), பிடித்தகுனி வில்-கையிற்பிடித்துள்ள வளைந்த வில், நீடு நாணொடு - நீண்டநாணியுடனே, துணிய - துணிபடவும், - (சல்லியன்), ஒரு நொடிக்குள் - ஒருநொடிப்பொழுதினுள்ளே, எதிர் அற்றிட - (தனக்கு) எதிரில்லாதபடி, - ஈர-(குறித்த இலக்கைத் தவறாது) பிளத்தலையுடைய, முனை வாய் - கூரிய நுனியினின்று, நெருப்பு உமிழ் - நெருப்பைச் சொரிகிற, வடிகணைகள் - கூரிய அம்புகளை, ஏவினான் - செலுத்தினான்; (எ-று.) நாணொடுவில்துணிய - நாணியும் வில்லும் துணிய என்க. வீரமெனப்பதம்பிரித்து வலிய என்று உரைத்தல், மோனைத்தொடைக்கு முரணாம், நொடி - கைந்நொடிப்பொழுது. (71) |