பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்71

ரெல்லோரும், வான் ஏற - வீரசுவர்க்கத்திற்குச் செல்ல, (அதனால்), நீ உருகி
மாழ்கி சோகம் உறினும் - நீமனமுருகிமயங்கி விசனப்பட்டாலும், மீள
வாரார்கள் - (இறந்த அவர்கள்) மறுபடி திரும்பிவர மாட்டார்கள்; மருக -
மருமகனே! வாழி - வாழ்வாயாக; கேள் - (யான் சொல்லும் வார்த்தையைக்)
கேட்டு நடப்பாயாக; முரண் அறாத கூர்வேலோய் - வலிமைநீங்காத
கூரியவேலாயுதத்தை யுடையவனே! போரில்மடிவுறாத பூபாலர் - யுத்தத்தில்
(இறந்தவர் போக) இறவாமலுள்ள அரசர்கள், முருக வேளையே போல்வர் -
(பலபராக்கிரமங்களிற்) குமாரக்கடவுளையே போல்வார்கள்; (எ - று.)

    முன்னிரண்டடி - "ஆண்டாண்டுதோறு மழுதுபுரண்டாலும், மாண்டார்
வருவரோ மாநிலத்தீர் - வேண்டா" என்ற உலகவியல்பையும், பின்னிரண்டடி-
எஞ்சியுள்ள அரசர்களது பகையழிக்கும் வன்மையையுங்கூறியன.  'வாழி' என
மாமன் மருமகனை வாழ்த்தினான்.  வேள் என்ற சொல் - விரும்பப்படுபவ
னென்று பொருள்படும்; அழகியவனென்று கருத்து.  காமவேளைவிலக்குதற்கு,
'முருகவேள்' என்றார்.  முருகு - அழகு இளமை தெய்வத்தன்மை;
அவற்றையுடையவன் முருகன்.

    இதுமுதற் பதினொரு கவிகள் - முதற்சீரும் நான்காஞ்சீரும்
புளிமாச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ் சீரும்தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியச்சந்த விருத்தங்கள்.  தனன தான தானான தனன
தானதானான - என்பதுஇவற்றிற்குச் சந்தக் குழிப்பாம்.            (87)

88. 

கிருதநாமனால்வேதகிருபனாதியோரான
நிருபர்சேனைசூழ்போதநிமிரவோடிமாறாது
பொருதுசீறிமேன்மோதுபுலியினேறுபோல்வாரை
முரசகேதுவோடோடமுரணுபோரின்மூள்வோமே.

      (இ -ள்.) கிருத நாமன் - கிருதவர்மா வென்னும் பெயருடையவனும்,
நால் வேத கிருபன் - நான்குவேதங்களையும் அறிந்த கிருபாசார்யனும்,
ஆதியோர் ஆன - முதலியோராகிய, நிருபர் - அரசர்களும், சேனை -
சேனைகளும், சூழ் போத - சூழ்ந்துவர, (நாம்), நிமிர ஓடி - நெருங்கச்
சென்று, மாறாது பொருது - இடைவிடாமற் போர் செய்து,- சீறி மேல் மோது
புலியின் ஏறு போல்வாரை - கோபங்கொண்டு பிறர்மேல் தாக்குகிற
ஆண்புலிபோல்பவரான பகைவர்களை, முரச கேதுவோடு ஓட -
முரசக்கொடியையுடைய யுதிட்டிரனுடனே ஓடிப்போம்படி, முரணு -
வலிமையாகச் செய்கிற, போரில் - போர்த்தொழிலில், மூள்வோமே -
முயல்வோமே; (எ - று.)

     ஈற்றுஏகாரம் - தேற்றவகையால், வலியப்போர்தொடங்கிச் செய்து,
பகைவரையோட்டுதல் எளிதென்ற கருத்தைக்காட்டும்.  முரசகேது -
வேற்றுமைத்தொகையன்மொழி.                            (88)