பக்கம் எண் :

78பாரதம்சல்லிய பருவம்

ஆளுகிறதுரியோதனனும், ஆவி அழிந்தஉடம்பு என - உயிர்நீங்கிய
உடல்போல, வன்மை அழிந்தான் - வலிமைகெட்டான்; (எ - று.)

    வேலொடுஇறந்தான் - வேல்பட்டமாத்திரத்தில், அதனோடுகீழ் விழுந்து
இறந்தானென்க.  இனி, 'வேலொடு' என்றதிலுள்ள 'ஒடு' என்னும்
மூன்றனுருபைக் கருவிப்பொருளில் வந்ததெனக்கொண்டு, வேலினால் என்று
உரைப்பினும் அமையும்.  நான்காமடியிற்கூறிய உவமையால், உடம்பு
தொழில்செய்தற்கு உயிர் இன்றியமையாச்சிறப்பினதாயிருத்தல் போலத்
துரியோதனனது செய்கைகளுக்கெல்லாம் சகுனியே மூலகாரணமென்பது
நன்குவிளங்கும்.

    இதுமுதல் ஆறு கவிகள் - ஈற்றுச்சீரொன்று மாங்காய்ச்சீரும்'
மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலித்துறைகள்;
காப்பியக்கலித்துறை: விருத்தக்கலித்துறை யென்பதும் இது.        (98)

99.-துரியோதனன்நிலைகலங்குதல்

தும்பியில்வாசியினீடிரதத்திலொர்துணையின்றிப்
பம்பியசேனையழிந்துவரும்படிபாராதான்
தம்பியர்யாவருமாதுலனும்பலதமரும்போய்
அம்பியிழந்தபெருங்கடல்வாணரினலமந்தான்.

     (இ -ள்.) தும்பியில் - யானைகளிலும், வாசியில் - குதிரைகளிலும்,
நீடுஇரதத்தில்-உயர்ந்ததேர்களிலும், ஒர் துணை இன்றி - (தனக்குத்)
துணையாவதுஒன்றுமில்லாமல், பம்பிய சேனை அழிந்து வரும்படி - நிறைந்த
(தனது)சேனை அழிந்து மீளும் விதத்தை, பாராதான் - (ஒருகாலும்)
பார்த்திராததுரியோதனன்,-தம்பியர் யாவரும் - (தனது) தம்பிமாரெல்லோரும்,
மாதுலனும் -மாமனான சகுனியும், பல தமரும்-(தனது) சுற்றத்தார்கள் பலரும்,
போய் -ஒழிந்ததனால், அம்பி இழந்த பெரு கடல் வாணரின் -
மரக்கலத்தையிழந்தபெரிய கடற்பிரயாணிகள்போல, அலமந்தான்
மிகவருந்தினான்; (எ - று.)

     உவமையணி.  'பாராதான்' என்றது, இதுவரையில் ஒருநாளும்
இப்படிப்பட்ட தன்சேனையழிவைப் பார்த்திராதவ னென்ற பொருளோடு,
இப்படி தனக்கு ஒருகால் நேருமென்று எதிர்பாராதவனென்ற கருத்தையும்,
இன்று நேர்ந்த அழிவைப் பார்த்துப் பொறுக்கமாட்டாதவனாயினா னென்ற
கருத்தையும் விளக்கும்.  போய் - போக என எச்சத்திரிபாக்குக;
[நன்-வினை-27.]பலதமர்-சைந்தவன் வீடுமன் முதலிய உறவினர்களும்,
கர்ணன் பகதத்தன்முதலிய நண்பர்களும்.                    (99)

100.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: துரியோதனன்
ஒருமந்திரபலத்தால் தன்பக்கத்தவரில் இறந்தவரையெல்லாம்
பிழைப்பித்துப் போர்செய்யக் கருதிச் செல்லுதலைக் கூறும்.

ஒருமதிவெண்குடையிருகவரிக்குலமூருஞ்சீர்
இரதமதங்கயமிவுளிபணிக்கொடிமுதலான