பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்87

போர்அரசன் தனை - சேனைத்தொகுதியுடனே மிகுதியாகச்
செய்யும்போரையுடைய  துரியோதனராசனை, எவண் காண்குதும் -
எவ்விடத்தில் (நாங்கள்) பார்க்கப் பெறுவோம்: காட்டுக - காண்பிப்பாயாக'
என்றார் - என்று சொன்னார்கள்; (எ - று.)

    சஞ்சயன் - திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன்
போரில் நாள்தோறும் நிகழுஞ் செய்திகளை இரவிற்சென்று
திருதராட்டிரனுக்குக்கூறிவந்தான்.  இவன் வியாசமுனிவனது அருளால்
அம்முனிவனிடம்தத்துவப்பொருள்களைக் கேட்டுணர்ந்த ஞானியாதலால்,
'வேதமுனிவன்'என்றும், 'அங்கை நெல்லிக்கனி கண்டனையாய்' என்றுஞ்
சிறப்பித்துக்கூறப்பட்டான்.  இரு தாளின் முடிகள்சேர்த்தி -
சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு.அங்கை நெல்லிக்கனி - எளிதில் நன்றாய்
அகமும் புறமும் முழுவதும்அறியப்படுதற்கு உவமம்.                (110)

111.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம்: சஞ்சயன் கூறும் விடை.

இவ்வோர்விரைவினிவன்றன்னைவினவவின்னோன்
அவ்வோனுயிருக்கழிவில்லையமரின்மோதி
வெவ்வோடையானைவிறன்மன்னவர்வீயயாரும்
ஒவ்வோன் மறித்துமமர்மோத வுணர்த லுற்றான்.

     (இ -ள்.) இவ்வோர் - (அசுவத்தாமன் முதலிய) இவர்கள்,
விரைவின் -விரைவாக, இவன் தன்னை - இந்தச் சஞ்சயனை வினவ .
(இவ்வாறு) வினாவ,-(அதற்கு), இன்னோன் - இச் சஞ்சயன்,-அவ்வோன்
உயிருக்கு -அந்தத்துரியோதனனுயிருக்கு, அழிவுஇல்லை -  (இப்பொழுது)
அபாயமில்லைஅமரில் மோதி - போரில் தாக்கி, வெம்ஓடை யானை விறல்
மன்னவர் -கொடுமையையும் நெற்றிப்பட்டத்தையுமுடைய
யானைச்சேனையையுடையவலிமையுள்ள அரசர்கள், வீய - இறக்க, யாரும்
ஒவ்வோன் - எவரும்(தனக்குச்) சமமாகப் பெறாத துரியோதனன், மறித்தும்
அமர் மோத உணர்தல்உற்றான் - மீண்டும் (பாண்டவரோடு) போர்செய்ய
ஆலோசித்தான்; (எ - று.)-இக்கவியில், 'வினவ', என்றது, 113 - ஆங்
கவியில் 'என' என்றவினையெச்சத்தைக்கொள்ளும்.

    அமரில் மோதி மன்னவர் வீய - போரில் தாக்கிப் பல
துணையரசர்களும்இறந்தபின்பு என்றபடி; இனி, போரில் தாக்கப்பட்டுப்
பாண்டவர்கள்இறக்குமாறு என்றுமாம்.  இவ்வோர், அவ்வோன் என்பவை -
இ அ என்னுஞ்சுட்டடியாப் பிறந்த பெயர்கள்; 'வினவவஞ்சன்' என்றும்
பாடம்.                                                (111)

112.

ஈண்டுச்சமரினிறந்தோர்களெவருமின்றே
மீண்டுற்பவிக்கவிடுவித்துவிரகினோடும்
பாண்டுப்பயந்தோர்படையாவுமடியமோதப்
பூண்டுத்தமமாமறைகொண்டகன்பொய்கைபுக்கான்.