பக்கம் எண் :

98பாரதம்சல்லிய பருவம்

பலத்தால்)மறுபடியும் உயிர்பெறுவார்கள்; அந்த வஞ்சகம் மறை - அந்த
ரகசியமானமந்திரத்தை, முன்பெற்றான் - முன்பு பெற்றுள்ளானான, வலம்புரி
தாரினானும் - நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனும், நெஞ்சு
அமர் வலிமையோடு - மனத்திற் பொருந்திய உறுதியுடனே, நீரிடைமூழ்கி -
நீரினுள்ளே முழுகி (மறைந்துநின்று அதனை ஜபித்து இறந்தவர்களைப்
பிழைப்பித்து), நீங்கள் துஞ்சிட இன்னம் பொருவான் - நீங்கள் இறக்கும்படி
இன்னமும் போர்செய்தற்கு, சூழ்ந்தனன் போலும் - ஆலோசித்தான்
போலும்,என்றான் - என்று சொன்னான், (கண்ணன்); (எ - று.)

    போலும் என்றது - ஒப்பில்போலியாய், ஊகித்தற்பொருளில் நின்றது.
நெஞ்சமர்வலிமை - மநோதைரியம்.  நீர் என்ற முன்னிலைப்பன்மைப்பெயர்,
நீம் எனத் திரிந்து, 'கள்' என்னும் விகுதியோடு சேர்ந்து, நீங்கள் என்று
வழங்கும்.  இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு:  மீள எழுந்திராத
பெருந்தூக்கமென்க.  வஞ்சகமென்றதற்கு - இங்கே சந்தருப்பத்திற்கு ஏற்ப,
இரகசியமெனப்பொருள்கொள்ளப்பட்டது; இனி, (பகைவரை) வஞ்சித்தற்குரிய
எனினும் அமையும்.                                         (129)

130.-வீமன்அக்குளத்தையடைந்து சிலகூறத்தொடங்கல்.

மாயவனுரைத்தமாற்றமாருதிகேட்டுத்தந்தை
ஆயவன்றன்னைப்போலவப்பெரும்பொய்கையெய்தித்
தூயதண்டுளவினானுந்துணைவருஞ்சூழ்ந்துநிற்பத்
தீயெனத்தீயநெஞ்சன்செவிசுடச்சிலசொற்சொல்வான்.

     (இ -ள்.) மாயவன் உரைத்த மாற்றம் கேட்டு - மாயையில்வல்ல
கண்ணபிரான் சொன்ன அவ்வார்த்தையைக்கேட்டு, மாருதி - வாயு
குமாரனானவீமன், தந்தை ஆயவன் தன்னை போல - தனதுபிதாவான
வாயுபகவானைப்போல [வெகுவிரைவாக], அ பெரு பொய்கை எய்தி -
அந்தப் பெரியதடாகத்தையடைந்து,- தூய தண் துளவினானும் துணைவரும்
சூழ்ந்து நிற்ப-பரிசுத்தமான குளிர்ந்த திருத்துழாயையுடைய கண்ணனும்
தன்னுடன் பிறந்தவர்நால்வரும் (அக்குளத்தைச்) சூழ்ந்துநிற்க, தீ
எனதீயநெஞ்சன் செவி சுட சிலசொல் சொல்வான் - நெருப்புப்போலக்
கொடியமனமுடையவனானஅத்துரியோதனனது காதுகள் வருந்தும்படி
சிலவார்த்தைகளைக்கூறுபவனானான்; (எ - று.)- அவற்றை, அடுத்த
ஏழுகவிகளிற் காண்க.                                     (130)

வேறு.

131.-ஏழுகவிகள் -துரியோதனனைக்குறித்து வீமன் கூறும்
வார்த்தை.

கங்கைமகன் முதலாகக் காந்தாரன் முடிவாகக் களத்தில் வீழ்ந்த,
துங்கமணி முடிவேந்தர் சொல்லிமுடிப் பதற்கடங்கார் துரக மாவும்,
செங்கனகமணிக்கொடிஞ்சித் திண்டேரும் பெரும் பனைக்கைச்