வடசொல்
தென்சொல் காணும்வழிகள்
வேத ஆரியருள் விரலிட்டெண்ணத்தக்க ஒருசிலர் கிமு 2000
போன்ற பண்டைக் காலத்தே தமிழகத்து வந்தமர்ந்ததாகத் தெரியினும், கடைக்கழகக் காலத்திலேயே
வடமொழியால் தமிழ் தாக்குண்ட நிலை விளங்கித் தோன்றியதின் விளைவாக வடமொழி தென்மொழிப்
போராட்டம் அல்லது வடசொல் தென்சொல் வேறுபாட்டுணர்ச்சி தொடங்கியிருக்கின்றது.
|
இயற்சொல்
திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
|
(தொல்.
880)
|
என்னும் தொல்காப்பிய நூற்பா தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 7ஆம் நூற்றாண்டு) வடசொல்
வேறுபடுத்தி யுணரப்பட்டமையை உணர்த்துமே யன்றித் தூய தமிழரால் வெறுத்தொதுக்கப்பட்டமையை உணர்த்தாது.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை வடமொழியிலுள்ள சொற்களெல்லாம்
பெரும்பாலும் வடசொல்லே என்னும் தவறான கருத்து, தமிழருள்ளத்திலும் நிலைத்திருந்தது. வடமொழியிலும்
தென்சொற்களுண்மை கண்டு அவ் வுண்மையை முதன்முதல் வெளிப்படுத்தியவர் பண்டாரகர் (Dr.) குண்டர்ட்டு,
கால்டுவெல், போப்பு என்னும் மேலையறிஞராவர். இவருள் இடைஞர், தலைசிறந்தவர். அவரும், தென்
சொல்லை வடசொல்லினின்று பிரித்துணரும் வழிகளைக் கூறினரேயன்றி, வடசொல்லைத் தென்சொல்லினின்று
பிரித்துணரும் வழிகளைக் கூறினாரல்லர். ஏனெனின் அது அவரது திரவிட ஒப்பியல் இலக்கணத்திற்குத்
தேவையானதன்று. ஆயினும், அவர் தென் சொற்குக் கூறிய விதிகளைத் துணைக்கொண்டே வடசொற்கும்
சிலவற்றை வகுத்துக் கொள்ளலாம். அவை வருமாறு.
|
வடசொற்கள்:
1. மூலவடிவில் ஆரியவெழுத்தும் ஆரிய மெய்ம்மயக்கமும் அமைந்திருப்பன.
2. பண்டைத் தமிழில் வழங்காது பிற்காலத் தமிழில் வடமொழியினின்று வந்து வழங்குவன.
3. தமிழில் வேரின்றி ஆரியத்திலேயே வேர் கொண்டிருப்பன.
4. தமிழும் தமிழினின்று திரிந்த திரவிடமுமான எல்லா மொழிகளிலும் வழங்காது,
அவற்றுள் ஒன்றில்மட்டும் வழங்குவன.
|
|