பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 251 -

தமிழில் உரைநடை வளர்ச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.

தாமோதரம் பிள்ளை

சி. வை. தாமோதரம் பிள்ளை (கி. பி. 1832 - 1901) பல பாட்டுகளையும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேறிய அவர், ஆங்கிலத்தில் பெற்றிருந்த புலமையையும் ஆராய்ச்சியறிவையும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தினார். அவருடைய பாட்டுகளும் உரைநடையும் பழைய முறையில் சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. இன்று அவர் இயற்றிய நூல்கள் மறக்கப்பட்ட போதிலும், பனையோலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகள் சிலவற்றைப் பெருமுயற்சியுடன் படித்து முதல்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறுக்கப்படவில்லை. நீதிபதி அளவிற்கு உயர்பதவி பெற்று விளங்கிய அவர், அக்காலத்தில் தமிழ்த் தொண்டைப் பெருமையாகக் கருதினார். உதயதாரகை என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து தொண்டு புரிந்தார். பனையோலை ஏடுகளைப் புறக்கணித்தால் பழைய நூல்கள் அழிந்துவிடுமே என்று பெருங்கவலை கொண்டு முதல் குரல் எழுப்பிப் பல தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர் அவர். தமிழ் மொழியைத் தாய் என்று வணங்கிப் போற்றும் அளவிற்கு முதல் முதலில் உணர்ச்சி ஊட்டியவர் அவர். “சங்கம் மரீஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம்... எத்தனையோ திவ்ய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையோ? ஆச்சரியம்! ஆச்சரியம்! அயலான் அழியக் காண்கிலும் மனம் தளம்புகின்றதே! தமிழ்மாது நும் தாய் அல்லவா? இவள் அழிய நமக்கு என் என்று வாளா இருக்கின்றீர்களா?” என்று எழுதிய சொற்களில் தமிழ் மொழியிடத்திலும் இலக்கியங்களிடத்திலும் அவர் கொண்டிருந்த பக்தியுணர்ச்சி புலனாகிறது. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் முதலான தமிழறிஞர் பலர் முன்னேற ஊக்கம் ஊட்டியவர் அவர்.

மற்றப் புலவர்கள்

யாழ்ப்பாணத்துக் கனகசபைப்புலவர் (1829 - 1873) கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். திருவாக்குப் புராணம். அழகிரிசாமி மடல் என்னும் நூல்களைப் பழைய மரபை ஒட்டி இயற்றியவர்.