பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 252 -

வி. கனகசபைப்பிள்ளை (1855 - 1906) என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், ‘1800 ஆண்டுகட்குமுன் தமிழர்’ என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆராய்ந்தும் தொண்டு செய்தார்.

இலங்கை அளித்த வழக்கறிஞர்களுள் தி. க. கனகசபைப்பிள்ளை (கி. பி. 1863 - 1922) என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திற்கு உரை எழுதினார்.

நா. கதிரைவேற்பிள்ளை (1844 - 1907) மற்றொரு யாழ்ப்பாணப் புலவர். தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். ஒரு நல்ல அகராதியும் தொகுத்தார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். இவர் பெயரால் வெறோரு புலவர் கு. கதிரைவேற்பிள்ளை (1829 - 1904) யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து தொண்டு புரிந்தார்.

ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்களை இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் என்பவர் (1830 - 1909). அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலத் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (1854 - 1922) வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார்; சாணக்கிய நீதி வெண்பா. மேகதூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு. சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த நல்ல வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.

விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி. இலக்கியம், சமயம், தத்தவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர் அவர். அவருடைய ஆங்கிலப் புலமை, ஆராய்ச்சிக்கு மிக உதவியது. பழைய தமிழ்நாட்டு இசைக்கருவியாகிய