பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 253 -

யாழ்பற்றிப் பல ஆண்டுகள் ஆராய்ந்து ‘யாழ்நூல்’ என்ற விரிவான நூல் இயற்றியுள்ளார். இனிய கவிதைகள் பல இயற்றித் தந்துள்ளார். “ஈசன் உவக்கும் இன்மலர்கள் மூன்று” என்ற தலைப்பில் சிறுமியர் பேசிக்கொள்ளல் போல் உள்ள மூன்று பாடல்களும் அவருடைய உயர்ந்த உணர்வைப் புலப்படுத்துவன. கடவுள் வேண்டுவது வேறு எந்த மலரையும் அல்ல, உள்ளமாகிய தாமரைப் பூவையே. கடவுளுக்குப் பொருத்தமாக வாய்த்த மலர் எவை? அவரை வழிபடுவதற்காகக் கூப்பிய கைகளாகிய காந்தள் மலர்களே. கடவுளுக்கு இசைந்த மலர்கள் எவை? அவரைப் பக்தியோடு நோக்கும் கண்களாகிய நெய்தல் மலர்களே. இவ்வாறு பாடியுள்ள பாடல்கள் கனிவுமிக்க தெளிவான நடையில் அமைந்துள்ளவை காணலாம்.

           வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
           வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ?
           வெள்ளைநிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல
           உள்ளக் கமலம்அடி உத்தமனார் வேண்டுவது.
           காப்பவிழ்ந்த மாமலரோ கழுநீர் மலர்த்தொடையோ
           மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
           காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்த்தொடையும்அல்ல
           கூப்பியகைக் காந்தள்அடி கோமகனார் வேண்டுவது
           பாட்டளிசேர் கொன்றையோ பாரில்இல்லாக் கற்பகமோ
           வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
           பாட்டளிசேர் கொன்றைஅல்ல பாரில்இல்லாப் பூவும்அல்ல
           நாட்டவிழி நெய்தல்அடி நாயகனார் வேண்டுவது.

இலக்கியத் துறையில் பல வகைத் தொண்டு ஆற்றிய இவர். நாடக வளர்ச்சியிலும் ஆர்வம் மிகுந்தவர். நாடகத்தின் இலக்கணமும் நாட்டியத்தின் இலக்கணமுமாக உள்ள மரபுகளைத் திரட்டி, மதங்க சூளாமணி என்ற பெயரால் ஒரு நூல் தந்துள்ளார்.

நாடகங்கள்

இலங்கையில் மிகச் சிறப்பாக வளர்ந்த இலக்கியத் துறை நாடகம் எனலாம். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் புலவர் பலர் நாடகங்கள் இயற்றுவதில் ஈடுபட்டனர். ஆறுமுக நாவலரின் தந்தையாகிய கந்தப்பிள்ளை என்பவர்மட்டுமே இருபது நாடகங்களுக்கு இயற்றினார். அவர் இராமவிலாசம், சந்திரகாரம் முதலிய நாடகங்கள் இயற்றினார். ஆறுமுக நாவலரின் ஆசிரியனார் சேனாதிராயர் என்பவர், நல்லைக் குறவஞ்சி