பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 254 -

முதலியன இயற்றினார். இவற்றால், அக்காலத்து இலங்கை அறிஞர் நாடக இலக்கியத்தில் கொண்டிருந்த மட்டற்ற ஆர்வம் புலப்படுகிறது. பலர் இராமாயண பாரதக் கதைகளை ஒட்டி நாடகநூல்கள் இயற்றினார்கள். கோவலன் கண்ணகி கதையைக் ‘கோவலன் நாடகம்’ என்ற பெயரால் இணுவிற் சின்னத்தம்பி என்பவர் இயற்றினார்.  நாடக நூல்களின் இடையே அழகான இசைப்பாடல்கள் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். தனியே பாடிய கீர்த்தனை முதலிய இசைப்பாடல்களும் இலங்கையில் பல உண்டு. ஆறுமுக நாவலரும் சில கீர்த்தனைகளைப் பாடியுள்ளார்.

கண்டன நூல்கள்

சமயத் தொடர்பான மறுப்பு நூல்கள், கண்டன நூல்கள் பல இலங்கையில் தோன்றித் தோன்றி மறைந்தன. பெரும்புலவர்களாகிய ஆறுமுக நாவலர், கதிரைவேற் பிள்ளை முதலியவர்களும் கண்டன நூல்கள் எழுதியுள்ளனர். கதிரைவேற் பிள்ளை ‘அருட்பா அன்று மருட்பா’ என்ற நூல் எழுதினார். ‘சிவனும் தேவனா’ என்று ஒருவர் கண்டன நூல் எழுத, அந்தக் கண்டனத்திற்கு மறுப்பாக ‘சிவனும் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு’ என்று மற்றொருவர் கடுமையான நூல் எழுதினார். ‘ஞானக்கும்மி’ என்று ஒரு நூல் வந்தது. ‘அஞ்ஞானக் கும்மி’ என்று அதற்கு மறுப்பு நூல் எழுந்தது. ‘அஞ்ஞானக் கும்மி மறுப்பு’ என்று அதற்குக் கண்டனமாக இன்னொரு நூல் இயற்றப்பட்டது. கிறிஸ்தவர்களும் சைவர்களும் அவ்வாறு முரண்பாடு கொண்டு நூல்கள் இயற்றினார்கள். அத்தகைய நூல்கள் பலவும் இன்று மறைந்து விட்டபோதிலும், அவற்றால் தமிழ் உரைநடை விறுவிறுப்புப் பெற்று வளர்ந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உரைநடை இலக்கியம்

ஐரோப்பியர் தொடர்பால் பொதுவாக உரைநடை வளர்ச்சி பெற்றது என்பதை இலங்கையிலும் காணலாம். நாவல் என்னும் கதை வகையிலும் இலங்கை பின்தங்கவில்லை. சரவணப்பிள்ளை என்பவர் ‘மோகனாங்கி’ என்ற நாவல் எழுதி அந்தத் துறையில் வழிகாட்டியாக விளங்கினார். அதன்பிறகு இன்றுவரையில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதி இலங்கைக்கும் தமிழுக்கும் பெருமை தேடிவரும் எழுத்தாளர் பலர் அங்கு உள்ளனர். கணக்கற்ற சிறுகதைகள் இலங்கையில் படைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல, தமிழ்நாட்டுச் சிறுகதைகளோடு போட்டியிட வல்லவனவாக - உணர்ச்சியும் வடிவச்சிறப்பும் உள்ளனவாக - இருக்கின்றன.

இலங்கையிலும் நாவல்கள் எழுதித் தமிழ் இலக்கியம் வளர்த்தவர்கள் சிலர். தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கியும், சீ. வை.