சொற்கள்
அவருடைய நடையில் புதிய ஆற்றல் பெறுகின்றன. ஆமைபோல் நகர்வன என்று நாம் எண்ணி
வந்த சில எளிய சொற்கள் அளவற்ற வேகத்தைப் பெற்று அம்புகளாகப் பாய்கின்றன. பொருளாதார
ஏற்றத்தாழ்வு என்ன என்ன தீமைகள் செய்துவருகிறது என்பதைப் பல இடங்களில் அவர் தெளிவாக்கிக்
காட்டுகிறார். குழந்தைகள்முதல் காதலர்கள் வரையில் எல்லோருடைய வாழ்க்கையையும்
அந்த ஏற்றத்தாழ்வு எப்படி ஆட்டி வைக்கிறது என்பதை அங்கங்கே விளக்கிச் சொல்கிறார்.
நையாண்டி
செய்து குத்திக்காட்டி எழுதும் சிறுகதை ஆசிரியர் வல்லிக்கண்ணன். ஆண்சிங்கம், கவிதை
வாழ்வு, தத்துவ தரிசனம் முதலிய சிறுகதைகள் அவருக்குப் புகழ் தந்தவை. அவருடைய படைப்புகள்
ஆற்றலும் வேகமும் உடையவை; பொருளாழம் உள்ளவை. ‘பெரிய மனுஷி’ என்ற
கதை, பலர் உள்ளத்தைக் கவர்ந்தது.
ரகுநாதனின்
சிறுகதைகள் புரட்சியான கருத்துகளுக்காகப் படைக்கப்பட்டவை. ஓட்டமுள்ள நடையின் அழகை,
அவருடைய கவிதைகளில் காண்பது போலவே, சிறுகதைகளிலும் காண்கிறோம்.
அறிஞர்
அண்ணா படைத்தளித்துள்ள சிறுகதைகள் அவருடைய நாடகங்கள் போலவே ஆற்றல் மிக்க நடையில்
அமைந்தவை. ராஜாடி ராஜா, பேய் ஓடிப்போச்சு, செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம்,
பிடிசாம்பல் முதலான சிறுகதைகள் புதிய கற்பனைச் செல்வங்கள். அவருடைய படைப்புகள்
சமுதாய நலத்திலும் சீர்திருத்தத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தை விளக்குவன.
ஜெயகாந்தன்
சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் புகழ் பெற்று விளங்கும் எழுத்தாளர். ‘விரக்தி’
என்ற சிறுகதையில் ஒருவன் காதலில் தோல்வியுறுகிறான்; பெண் இனத்தையே வெறுக்கிறான்;
பட்டாளத்தில் போய்ச் சேர்கிறான்; அங்குப் பல சோதனைகளை எதிர்ப்படுகிறான்;
காதலியின் நினைவு அங்கும் அவனை விட்டபாடு இல்லை. ‘இரவில்’ என்ற
சிறுகதையில் காணும் அனாதைப் பெண் தன் வயிற்றுப் பசிக்காக உடம்பை விற்கத் துணிகிறாள்;
ஒருவனுடைய இச்சையைத் தீர்க்க இணங்குகிறாள். ஆனால் அங்கும் அவளுடைய வறுமை வேறு வடிவில்
வந்து வாட்டுகிறது. அவன் எட்டணா என்று எடுத்துக் கொடுத்துவிட்டுப் போன காசு, உற்றுப்
பார்த்தபோது காலணாவாக ஏமாற்றம் தருகிறது. ‘தாலாட்டு’ என்ற சிறுகதையில்
வயதானவனுக்கு மனைவியாக வாழ்க்கைப்படும் இளம்பெண், முதல் இரவில் தன் கணவனின் கைக்குழந்தைக்குத்
தாலாட்டுப் பாடும் அவல நிலையில்
|