|
காதலில் போட்டி
கிணற்றில் இறங்கி அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக
அவளையே பின் தொடரும் அத்தை மகன் அங்கு வந்து நின்று கண்ணைச் சிமிட்டுகிறான்.
இவனுடைய அன்பில் வீரம் பிறக்குமா, அல்லது எதிர்ப்பைக் கண்டு அச்சம் பிறக்குமா என்று
சோதிக்க அவள் விரும்புகிறாள். அவளுக்கு மாமன் பிள்ளைகள் பலர் உண்டு. அவர்கள் முறை
மாப்பிள்ளைகள் அல்லவா? அவர்களுடைய குத்தகை மாந்தோட்டம் மலையில் இருந்தது. அங்கே
அவர்கள் அடிக்கடி போவார்கள். அவர்களை அழைப்பது போலப் பாவனை செய்கிறாள். அவன்
பயந்து நடுங்காமல் தன்னோடு தூரக்காட்டிற்கு வரும்படி அழைக்கின்றான். சோதனையில் அவன்
வெற்றி பெற்று விட்டானா?
|
பெண்
:
|
இரும்பால கிணத்துலயோ
இருந்து தலை முழுகயிலே
கரும்பான அத்தை மகன்
கண்ணைக் கண்ணைச் சிமிட்டுறானே
மலையிலொரு மாமரமாம்
மாமன் மகன் குத்தகையாம்
இடையிலொரு சொல்லு வந்தா
ஏத்துக் கொங்க மாமன் மக்கா
!
|
|
ஆண்
:
|
ஏத்தமடி கோட்ட மலை
இறக்கமடி சடையாறு
தூரமடி நம் காடு
தொயந்து வாடி நாம் போவோம். |
வட்டார வழக்கு:ஏத்துக்கொங்க-ஏற்றுக்கொள்ளுங்கள்
;
தொயந்து-தொடர்ந்து.
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம். |
|