இதற்குப்பின் ஆயிரக்கணக்கான
பாடல்களை நாட்டுப் பாடல் பிரியர்கள் திரட்டி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
வாய்மை நாதன், அரசக்கண்ணு இருவரும் தஞ்சை மாவட்டத்தின் முழுத்தொகுப்பையுமே அனுப்பியுள்ளார்கள்.
இன்னும், மின்னல் கோவை மாவட்டப் பாடல்களை அனுப்பியுள்ளார். பொன்னீலன் குமரி மாவட்டப்
பாடல்களைச் சேகரித்து வைத்துள்ளார். இவற்றையெல்லாம் வெளியிட வேண்டும்.
இதற்கெல்லாம்
ஒரு தீர்வு உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் நாட்டுப் பாடல் கருத்தரங்கில்
தோன்றலாம். அக் கழகம் மாவட்டந்தோறும் சேகரிப்பாளருக்கு எழுதிப் பாடல்களைச் சேகரித்து,
வெளியிட முயன்று வருகிறது. என்னுடைய ஆதரவு அக்கழகத்தின் நாட்டுப் பாடல் வெளியீட்டு முயற்சிகளுக்கு
உண்டு.
இதில் சில படிப்பாளிகள்,
நாட்டுப் பாடல் என்றால் வாய் மொழி இலக்கியம், எழுதப்பட்டால் அது
‘வாய்
மொழி
’
அடைமொழியை
இழந்து இலக்கியமாகி விடுகிறது என்று சொல்லுகிறார்கள். வாய்மொழிப் பரவலுக்குக் காரணமே,
எழுத்தறிவின்மை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுத்தறிந்தவர்கள் 9 சதவிகிதம்.
இப்பொழுதும் 30 சதவிகிதம். பெண்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் 18 சதவிகிதம் மட்டும்.
எழுத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் உணர்ச்சிகளையும், கருத்துகளையும், நிகழ்ச்சிகளைப்
பற்றிய எதிர் விளைவுகளையும் பேச்சாலேயே அவர்கள் சொன்னார்கள். அதனால் நாட்டுப் பாடல்
என்றாலே வாய்மொழிப் பரவல் என்ற நம்பிக்கை
தவறாக ஏற்பட்டது.
ஒரு நாட்டுப் பாடல் எப்படி உருவாகிறது? தொழில் களங்களில் ஒரு பாட்டைப் பலர் உருவாக்கலாம். ஏற்றம்,
நடுகை முதலிய தொழில் பாடல்கள் தொழிலாளரது பொதுவான உணர்ச்சியால் இசையாகி வெளிப்படுவன.
அதுவல்லாமல் ஒரு சமூக நிகழ்ச்சியை வருணிக்கவும், சிக்கலான கதையமைப்புடைய கதையைப் பாடலாகப்
பாடவும் இந்த முறை உதவாது. சிவகாசிக் கலகத்தை எடுத்துக் கொள்வோம். இத் தொகுப்பிலேயே
நாலைந்து பாடல்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுதப்பட்டதால், எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப் பாடல் தன்மையை இழந்து
விடாது.
|