| 
 
  
 
 கும்மி 
 கும்மிக்குப் பல நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் பொருளாக வரலாம். 
 குத்து விளக்கேற்றி மங்கல விழாக்களில் பெண்கள் கும்மியடிக்கிறார்கள். நிலாக் காலங்களில் 
 விளையாட்டுக்காகவும் கும்மியடிப்பதுண்டு. 
 கீழ்வரும் கும்மிப் பாட்டில் காதற் குறிப்புள்ள பல பாடல்கள் 
 ஏற்கனவே சில தொகுப்புகளில் வெளி வந்துவிட்டன. இது வரை வெளி வராத பாடல்களை மட்டும் 
 கீழே தருகிறோம். 
  
 கும்மியடி பெண்கள் கும்மியடி-இரு 
 பாதம் காணவே கும்மியடி 
 நம்மையாளும் காடவ ராஜனை 
 நாடிக் கும்மியடியுங்கடி 
 இந்த நிலாவும் நிலாவுமில்ல-புள்ள 
 நித்திரைக் கொத்த நிலாவுமில்ல 
 இந்த நிலாவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் 
 சம்பந்த முண்டோடி வீராயி? 
 ஒரு வருசமா
: 
 ஒண்ணரை மாசமா 
 எண்ணெயும் தேய்த்து முழுகாம 
 சடைவளர்ந்ததும் சன்னியாசியானதும் 
 சபத முண்டோடி வீராயி? 
 காக்காச் சோளம் கருஞ்சோளம்-புள்ள 
 காசுக்கு ஒரு படி விக்கயிலே 
 துடி துடிச்சவன் துள்ளு மீசைக்காரன் 
 துட்டுக் கொருபடி கேக்கராண்டி 
 சின்னக் கிணத்துல பாம்படிச்சு-ஒரு 
 சிங்காரத் தோட்டத்திலே வேட்டையாடி 
 வேட்டையாடி துரை வீட்டுக்கு வாராரு 
 வெங்கலச் சொம்பிலே தண்ணி கொண்டா 
 எண்ணைக் கறுப்பி இளங்கறுப்பி 
 எண்ணை கொண்டுபோற வாணிச்சியே 
 சின்னத் துரை மகன் சாராட்டு வருகுது 
 தீவட்டிக்குக் கொஞ்சம் எண்ணை வாரு 
 
குறிப்பு: பிற்காலப் 
 பல்லவச் சிற்றரசர்களை காடவ ராஜன் என்ற பெயரில் அழைப்பது உண்டு. 
 
 
 
 
 
 | 
  
 
 சேகரித்தவர்:
 
 
 
 
 கவிஞர் சடையப்பன்  | 
 
  
 
 இடம்: 
 அரூர், 
 தருமபுரி மாவட்டம்.  | 
  
  
 
  
 
   |