பக்கம் எண் :

35

Tamil Virtual University

தெய்வங்கள்

பிள்ளையார்

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார். மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில், பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும், இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறி விட்டார்.

வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம். வங்காள ராஜ்யத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும், அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார். விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக, விநாயகரை வேண்டி பெண்கள் விரதம் இருக்கிறார்கள்.

பொதுவாக, செழிப்பைக் குறிக்கும் தெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே, செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலும், மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்,

இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.

பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.