| 
 உழவும் தொழிலும்  
 ஒரு நூற்றாண்டுக்கு முன் நமது நாட்டில் முக்கியத்தொழில்கள் விவசாயமும், 
 நெசவுமாகவே இருந்து வந்தன. பிற தொழில்களெல்லாம் இவற்றைச் சார்ந்தே இருந்தன. 
 கொல்லன், தச்சன் முதலியவர்கள் உழவுக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுத்தனர். 
 சமூக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் வேறு தொழில்கள் இல்லை. 
 வண்ணான், நாவிதன், கொத்தன் போன்றவர்கள் தனி மனிதனது சுக வாழ்விற்கு உதவி புரிந்தார்கள். 
 இத்தகைய உற்பத்தி முறையில் மனித உழைப்பே முக்கியமான உற்பத்தி சக்தியாக இருந்தது. 
 இச்சக்தி கிராம சமுதாயத்தினுள்ளே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும், 
 கோயில்கள் இவ்வுழைப்பின் மீது ஆதிக்கம் புரிந்தன. அதற்கடுத்தாற்போல் நிலவுடைமையாளர்களும், 
 உயர் குலத்தினரும் ஆதிக்கம் புரிந்தனர். உழவர்கள் பெரும்பாலும், கோயில் நிலங்களையோ 
 அல்லது நில உடைமையாளர்களின் நிலங்களையோ குத்தகைக்குப் பயிரிட்டு வந்தார்கள். 
 கோயில் குத்தகையும் நிலவுடமையாளரின் குத்தகையும், மிக அதிகமாக இருந்தது. இச் சுரண்டல் 
 முறையினால்தான் கோயில்களில் ஆடம்பரமான திருவிழாக்கள் நடத்தவும்,
 நூற்றுக்கணக்கானவர்களுக்கு 
 சோறிடவும் பொருள் குவிந்தது. மேல் வர்க்கத்தினரும் தங்கள் சுரண்டலினால் ஆடம்பர 
 வாழ்க்கையில் திளைத்தனர். கிராம கைத் தொழிலாளிகள் ஆண்டுக்கொரு முறை 
 கோயிலிலிருந்தும் நிலச்சுவான்களிடமிருந்தும் உழவர்களிடமிருந்தும் தானியத்தை ஊதியமாகப் 
 பெற்று வந்தனர். அவர்களது வாழ்க்கை, மேல் வர்க்கத்தாரின் ஆதிக்கத்தினுள் இருந்தது. 
 பல நூற்றாண்டுகளாக இவ்வாறு உறங்கிக் கிடந்த கிராம வாழ்க்கை 
 வெள்ளையர் வருகைக்குப்பின் மாறத்தொடங்கிவிட்டது. நிலவுடைமைச் சுரண்டலால்
 வாழ்விழந்த 
 உழவர்கள், கைத்தொழிலாளர்கள் முதலியோர் வெள்ளைக்காரர்கள் தொடங்கிய புதுத் தொழில்களில் 
 கூலி வேலை செய்ய கிராமங்களை விட்டு வெளியேறினர். மேற்கு மலைச் சாரலில் காடுகளை வெட்டித் 
 தேயிலை, காப்பித் தோட்டங்களையும், புதிதாகத் தோற்றுவிக்க அவர்கள் சென்றார்கள். 
 ரயில் பாதைகள் அமைக்கவும், ரஸ்தாக்கள் போடவும், துறைமுகங்கள் கட்டவும், ஆலைகள் கட்டவும், 
 சுரங்கங்கள் தோண்டவும், அவர்கள் தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பம்பாய் 
 முதலிய நகரங்களுங்கும், கடல் கடந்த சீமைகளுக்கும் சென்றார்கள். அங்கெல்லாம் உழைத்து 
 உழைத்து அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. 
  |