சீட்டைப் பறித்தானோ?
மனைவியும் கணவனும் செல்வத்தில் திளைத்து இன்ப வாழ்க்கை நடத்தினர்.
அவர்கள் பொருளுக்குச் சேதம் வராமல் அரண்மனையாரும், கும்பினியாரும் காவல் முறை செய்தனர்.
ஆனால் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த கால தூதரிடமிருந்து யார் அவள் கணவனைப்
பாதுகாப்பது? கணவன் வீரமிக்கவன், எந்தத் திருடனாலும் அவன் கையிலுள்ளதைப் பிடுங்க
முடியாது. எப்படித்தான் அவன் சீட்டை கால தூதர்கள் பறித்தார்களோ? ரயிலிலேறிப்
போய்க் காலையில் ஓரிடத்திலும், மாலையில்
மற்றோரிடத்திலும் களவு செய்யும் பக்காத்
திருடர்களைவிட கால தூதர்கள் கடிய வேகத்தில் சென்று உயிரைத் திருடும் கள்வர்களோ என்று
மனைவி கேட்கிறாள்.
வெள்ளிச் சுருணை வரும்
விதமான நெல்லு வரும்
விதமான நெல் அவிக்க
மேகத்துத் தண்ணி வரும்
தங்கச் சுருணை வரும்
தனிச் சம்பா நெல்லு வரும்
தனிச்சம்பா நெல்லவிக்க
தந்தி மேல் தண்ணி வரும்
!
அல்லியும் கொய்யாவும்-அரமணையில்
அலுங்கப் பழுத்திருக்க
அசையாம காலுவைக்க
அரமணையார் காவலுண்டும்
கொய்யாவும் பிலாவும்
குலையாய் பழுத்திருக்க
கூசாமல் காலு வைக்க
கும்பினியார் காவலுண்டும்
அடிக்க வந்த தூதுவரை
அடியாள் சரணமின்னேன்.
கொல்ல வந்த தூதுவரை
கோடி சரணமின்னேன்
காலை ரயிலேறி
கல்கத்தா போயிறங்கி
காசப் பறிச்சானோ
கைவிலங்கு போட்டானோ
சிகப்பு ரயிலேறி
சீமைக்கே போயிறங்கி,
சீட்டப் பறிச்சானோ?
சிறுவிலங்கு போட்டானோ
வட்டார வழக்கு: தந்திமேல் தண்ணி-அவசரமாக
;
தூதுவர்-எமதூதர்.
சேகரித்தவர்
:
S.M.
கார்க்கி |
இடம்
:
சிவகிரி,நெல்லை. |
|