பக்கம் எண் :

435

Tamil Virtual University

அஞ்சிலே பூ முடிந்தாள்

பிள்ளைப் பிராயத்தில் சொத்திற்காகக் கிழவனுக்கு அவளை மணம் செய்து வைத்தார்கள். அவள் பிராயமானதும் அவன் இறந்துபோனான். அவளுக்கு தாலியறுத்து, ‘நீர்பிழிதல்’ என்ற சடங்கு செய்கிறார்கள். இச்சடங்குகள் குளக்கரையில் நடைபெறும். கரையில் போகும் யாரோ இங்கென்ன கூட்டம் என்று வினவுகிறார்கள். அதற்குப் பதிலளிப்பதுபோல அவள் பேசுகிறாள். குழந்தைப்பருவத்தில் மணமாகி காதலின்பம் அறியாமல், இனி அதனை நினைப்பதும் தவறென்ற நிலையில் வலிந்து துறவறத்தில் தள்ளப்பட்ட பெண்ணின் வேதனையை இப்பாட்டு விளக்குகிறது.

ஆத்துக் கருவாழே
ஆத்துலுள்ள நீர்வாழே
ஆத்தோரம் போறவங்க
ஆத்திலென்ன கூட்ட மென்றார்
அஞ்சிலே பூ முடிஞ்ச
அருங்கிளியார் கூட்டமம்மா
வையத்தார் கண்முன்னே
அப்போ கருப்பானோம்
அழகிலோர் மாட்டானோம்
கொழந்தையில் பூமுடிச்ச
குயிலாளு கூட்டமய்யா
சுத்தக் கருப்பானோம்
சொவுசிலே மாட்டானோம்

உதவியவர் : செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி

இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம்.