பக்கம் எண் :

448

Tamil Virtual University

கவலைக்கு ஆளானேன்

தாய் இறந்துவிட்டாள் ; மகள் விதவை. அண்ணணுக்கு மணமாகிவிட்டது. மதினி, மணமாகக் காத்திருக்கும் இப்பெண்ணை அன்பாக நடத்துவதில்லை. கலியாணமானால் தாயார் கப்பல் கப்பலாகச் சீர் அனுப்புவாள். அக்காலமெல்லாம் போய்விட்டது. இனி உணவு, உடைக்குக் கூட பஞ்சம் வந்துவிடும். தாய் மறைந்தபின் தனது வாழ்வில் ஏற்படப்போகும் மாறுதல்கள் அவளை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. அவள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.

வால் மிளகும் சீரகமும்
வரிசை வரும் கப்பலிலே
வரிசையிடும் தாயாரை
வனத்துக்கு அனுப்பி வைத்தேன்
சிறுமிளகும் சீரகமும்
சீருவரும் கப்பலிலே
சீரு விடும் தாயாரை நான்
சீமைக்கே அனுப்பி வைத்தேன்
கப்பல் வருமென்று
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்தவுடன் எனக்குக்
கடற்கரையும் ஆசையில்லை
தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்தவுடன்
துறைமுகமும் ஆசையில்லை
பத்தூர் தாயும்
பக்க உதவி செய்தாலும்
பாசமுள்ள தாய் உன்னைப்
பாடு வந்தால் தேடிடுவேன்
எட்டூர் தாயும்
எனக்குதவி செய்தாலும்
இன்பமுள்ள தாய் உன்னை
இடைஞ்சல் வந்தால் தேடிடுவேன்
சங்கம் புதர் நன்னாடு
சனம் பெருத்த ராச்சியங்கள்
இனங்களெல்லாம் ஒண்ணாக நான்
ஈசுவரியாள் துண்டு பட்டேன்
இஷ்டமுள்ள நன்னாடு
இனம் பெருத்த ராச்சியங்கள்
இனங்களெல்லாம் ஒண்ணாக நான்
ஈஸ்வரியாள் துண்டுபட்டேன்
தங்கமலையேறி எனக்குச்
சாதகங்கள் பார்க்கையிலே
தங்கமலை ராசாக்கள் என்னோட
தலை கண்டாத் தீருமினாக
பொன்னு மலையேறி எனக்கும்
பொருத்தங்கள் பார்க்கையிலே
பொன்னுமலை ராசாக்கள் என்னோட
புகை கண்டாத் தீருமின்னாக