பக்கம் எண் :

62

Tamil Virtual University

தாது வருடப் பஞ்சம்

இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்த கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடினால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப்பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரவத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது :