பக்கம் எண் :

97

Tamil Virtual University

தந்தை, தமது குழந்தைக்குப் பால் புகட்ட வாங்கிய சங்கின் அருமை பெருமைகளை அழகாக வருணித்துச் சொல்லுகிறாள்.

  ஒசந்த தலைப்பாவாம்
உல்லாச வல்லவட்டாம்
நிறைஞ்ச சபையில
நிப்பாக உங்களய்யா.
கோடு திறந்து
குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களய்யா.
அத்திமரம் குத்தகையாம்
அஞ்சு லக்ஷம் சம்பளமாம்
அய்க்கோடு வேலைக்கு
அநேகம் பேர் வந்தாக
காஞ்சி வனத் தண்ணே,
கண்ணே கரிக்குதுண்ணே
தெங்காஞ்சி எண்ணெய்க்கே
சீட்டெழுதி விட்டாக
பால் சங்கு போட்டு,
பவளவாய் நோகுதிண்ணு,
பொன் சங்கு வாங்க
போராக பொன் மருத,
மருதக்கட திறந்து
மனசுக் கேத்த சங்கெடுத்து,
சுத்தி வர சிகப்பு வச்சு,
தூருக்கோர் பச்சை வச்சு
வாயிக்கு வர்ணம் வச்சு
வாங்கி வந்தாக ஒங்களய்யா!
மருத அழகரோ
வாழ் மருத சொக்கரோ,
திருமால் அழகரோட
சேதிக்கோ வந்தவனோ
கல்லிய நெல் விளையும்
கானலெல்லாம் பூமணக்கும்
புல்லிள நெல் விளையும்
புண்ணியனார் போற பாதை
குளிக்க கிணறு வெட்டி
கும்பிட வோர் கோயில் கட்டி
படிக்க மடம் கட்டி வைக்க
பாண்டியனார் பேரனோ-
 

வட்டார வழக்கு: அய்க்கோடு-ஹைக்கோர்ட்; காஞ்சிவனம்-காஞ்சிபுரம்; மருத-மதுரை; தென்காஞ்சி-தென்காசி; போராக, வந்தாக-போகிறார்கள், வந்தார்கள்.

குறிப்பு: கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் என்பது தான தருமங்களாகும்.

சேகரித்தவர்:
கார்க்கி

இடம்:
சிவகிரி.