பக்கம் எண் :

98

Tamil Virtual University

தாலாட்டு
நச்சிரையா கண்ணுறங்கு

சொந்த நிலத்தில் பாடுபட்டுச் சீராக வாழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தவள் அவள். அவளுக்குத் தலைச்சன் குழந்தை பிறந்ததும் நாட்டில் பஞ்சம் தோன்றியது. வயிற்றுப் பிழைப்பிற்காக, பிறந்த ஊரை விட்டு மலைச் சரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு அக் குடும்பத்தார் வேலை தேடி வந்தவர்கள். காட்டு விலங்குகள் பயங்கரமாக கர்ஜிக்கும் இரவு நேரத்தில், களைப்பால் கண்ணயர வழியில்லை. குழந்தை வேறு கதறிக் கொண்டு தொல்லை கொடுக்கிறான். நச்சரவு போலத் தாயை உறங்க விடாமல் தொந்தரவு செய்கிறான். தனது மனவேதனையை வெளிப்படுத்தி அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுகிறாள் தாய்.

  சீரான அயோத்தி
சீமை விட்டுக் காடு வந்தோம்
காடு மலைகளிலே
கரடி புலி ஆளி சிங்கம்
கூடி வாழு மிந்த
கொடு வனத்தே நித்திரைபோ
அச்ச மில்லை என்று சொல்லி
அரசாண்டு வீற்றிருந்தோம்
நச்சரவு போல வந்த நச்சிரையா கண்ணுறங்கு
 

வட்டார வழக்கு: ஆளி-யாளி.

குறிப்பு: நமது கோயில்களில் நாயக்கர் கட்டிய மண்டபங்களில் சிங்க முகமும், துதிக்கையும் கொண்ட கற்பனை மிருகம் ஒன்றைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இது சிங்கத்தைவிட வலிமையுடையது என்று காட்ட சிங்கம் அதன் கால்களிடையே பதுங்கியிருப்பது போல் செதுக்கியிருப்பார்கள். இதற்கு யாளி என்று பெயர். அதனைத்தான் ‘ஆளி’ என்று பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சேகரித்தவர்:
வாழப்பாடி சந்திரன்

இடம்:
சேலம் மாவட்டம்.