பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 6 -

அரசனை வணங்கி, நிகழ்ந்தது கூறினான்.  உடனே அரசன் மனமகிழ்வுடன் முனிவரை எண்ணினான்.  அவரைக் காணும் பொருட்டுத் தான் புறப்படும் செய்தி குறித்து முரசறையுமாறு கட்டளை பிறப்பித்தான்.       (12)

மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்

13. இடிமுர சார்ப்பக் கேட்டு மியம்பிய வத்தி னத்தின்
  படுமத யானை தேர்மா வாள்நாற் படையுஞ் சூழக்
  கடிமலர் சாந்து மேந்திக் காவலன் றேவி யோடுங்
  கொடிநிரை பொன்னே யிற்குக் குழுவுடன் சென்ற வன்றே.

இடி போன்று முழங்கிய முரசொலிச் செய்தியை அந்நாள் மக்கள் கேட்டனர்.  வனபாலன் சொன்ன வனத்தை நோக்கி, யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைச் சேனையும் சூழ்ந்து வர, மணம் மிக்க மலர்களையும் வாசனைக் குழம்புகளையும் ஏந்திக் கொண்டு அரசன் தன் பட்டத்தரசியுடன், வரவீரமுனி வந்து தங்கியிருந்த அழகிய கொடிகள் நிறைந்த சூழலுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்றான்.      (13)

14. பொன்னெயிற் குறுகிக் கைம்மாப் புரவல னிழிந்துட் புக்கு
  நன்னிலத் ததிச யங்கள் நரபதி தேவி யர்க்குப்
  பன்னுரை செய்து காட்டிப் பரமன்றன் கோயி றன்னை
  இன்னியல் வலங்கொண் டெய்தி யீசனை யிறைஞ்சி னானே.

அழகிய மதிலைச் சூழ்ந்த முனிவனது இருக்கையை அடைந்ததும் நாடு காக்கும் மன்னன் யானை மீது இருந்து இறங்கி, உள்ளே புகுந்து, தன் தேவிக்கு முனிவரின் புகழெடுத்தோதி, வர்த்தமானர் வீற்றிருந்த சமவசரணக் கோயிலை வலமாக வந்து முனிவராகிய இறைவரை வணங்கினான்.    (14)

15. நிலமுறப் பணிந்தெ ழுந்து நிகரிலஞ் சினையின் முற்றிக்
  கலனணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலிற் பொங்கி
  நலமுறு தோத்தி ரங்கள் நாதன்றன் வதன நோக்கிப்
  பலமன மின்றி யொன்றிப் பலதுதி செப்ப லுற்றான்.

நிலத்தில் உடம்பு பொருந்த மன்னன் வணங்கி எழுந்தான்.  ஒப்பற்ற அழகிய உறுப்புத் தொழில் வாய்ந்த ஆபரணங்கள் அணிந்த அழகிய மார்பையுடைய அவன், காற்றினால் மோதப்பட்டுப் பொங்கியெழும் கடலைப்போல மனவெழுச்சி கொண்டு, இறைவனுடைய திருமுகம் நோக்கிப் பல மனம் இன்றி, அவனை வணங்கும் ஒருமையுள்ளத்தோடு தோத்திரம் பல சொல்லலானான்.(15)