|
பின் தன் கணவன்
முனிவரிடம் உபதேசம் பெற்று உண்ணாநோன்பு கொண்டு உயிர்விட்டுத் தேவனானபோது இவளும்
நோன்பு பூண்டு அவ்வுலகிலும் அவனையே கணவனாகப் பெற்று இன்பம் பெறலானாள் (146-149).
நாகவாவி:
பாம்புகள் உறைவதாகிய குளம். இது பிரிதிதேவி தன் குமாரனுடன் சென்று வழிபட்ட சித்தகூட
அருகனாலயத்தின் முன்பு இருந்தது (46).
நாகவிந்திரன்: நாகலோக வாசிகளின் தலைவன். இவனைப் ‘பவணேந்திரன்‘ என்று சைன சமயத்தார் வழங்குவர்.
இவனை இந்திரருள் ஒருவன் என்பர் (மணி27, 171) (53).
நாவலந்தீபம்: நாவல் மரங்கள் ஓங்கி வளர்ந்த பெருநிலப்பரப்பு; ‘நாவலோங்கிய மாபெருந் தீவினுள்‘
என்பது மணிமேகலை. உலகிலுள்ள ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவாகும் இது. இதனைச்
‘சம்புத் தீவு‘ என்றும் வடமொழியாளர் வழங்குவர். இப் பெரு நிலப்பரப்பு நூற்றுத் தொண்ணூறு
கூறுகளாக விளங்கியது. அவற்றுள் ஒன்றே பரதகண்டம் (5, 26,
145).
நேமீசர்: இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுள் இருபத்திரண்டாமவர். இந்நேமிநாதரை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
ஒன்றுவிட்ட சகோதரன் என்று அரிவம்சபுராணம் கூறுகிறது. அசோக மரத்தின் அடியிலே முக்குடை
நீழலில் வீற்றிருப்பவர். இவர் ‘நேமிநாதர்‘ என்றும் போற்றப்பெறுவர். நேமிநாதர்
என்றால் தரும சக்கரத்தையுடையவர் என்பது பொருள். வள்ளுவர் ‘அறவாழி யந்தணன்‘ என்று
குறிப்பிடுகின்றார். இவர் சிங்காதனத்தின் வீற்றிருந்தருள்வார். இந்திரன் முதலியவர்
இவரை அடைந்து இறைஞ்சி ஏத்துவர். சீவகசிந்தாமணியில் ‘நிகரில் நேமிதன் நீள்நகர்‘
என்று இவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார். அருகக் கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்றாக ‘நேமிநாதன்‘
என்பதைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது (காப்பு 1).
பஞ்சசுகந்தனி: இவள் ஒரு கணிகை; கின்னிரி-மனோகரி என்னும் இசைச் செல்வியரின் தாய். இம்மங்கையரின்
இசைப் புலமையைச் சீர்தூக்கிய நாககுமாரனுக்கே இவர்களை மணஞ்செய்து கொடுத்தாள் பஞ்சசுகந்தனி
(54-56).
பஞ்சமிநோன்பு: பூரணமான சுக்கிலப் பட்சத்துப் பஞ்சமியில் இயற்றப்படும் நோன்பு. இத்தினத்தில் உண்ணாநோன்பு
மேற்கொண்டார்க்குப் போகங்களையும் புண்ணியங்களையும் உண்டாக்கும் என்பர் (148).
தத்தநாமர் என்னும் முனிவர் பஞ்சமிநோன்பு நோற்ற நாகதத்தன்-வசுமதி வரலாறு கூறி, அவர்களே
இப்பொழுது நாககுமாரன்-இலக்கணையாவர் என்றும் எடுத்துரைக்கிறார். அதுகேட்ட நாககுமாரன்
அந்த நோன்பு முறை கேட்க அவர் அதனை விரித்துரைத்தார். கார்த்திகை, பங்குனி, ஆடி
மாதங்களில் வரும் சுக்கில பக்கத்திலே பஞ்சமி திதியில் நோற்கப்படுவது இந் நோன்பு.
|