பக்கம் எண் :

24

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

மக்களுள்ளம் புகுந்தார்

வாணிபப் பணியால் அன்னார்
     வெளியிடம் பலவும் சென்றே
மாண்புடன் அறிவு பெற்ற
     மகிழ்ச்சியும் என்னே நெஞ்சே


ஆடுகள் மேய்க்கச் சென்றே
     அறிவினில் வளர்ந்த அந்த
பீடுறு நிலையை எண்ணப்
     பேரின்பம் தோன்றும் நெஞ்சே


வாலிப வனப்பு நல்ல
     வாய்மைசேர் பேச்சு, மற்றும்
சீலஞ்சேர் ஒழுக்கங் கொண்டே
     சிறந்திட லானார் நெஞ்சே


நேர்மைக்கோர் இருக்கை யாகி
     நேர்த்தியாய்ப் பழகி வந்த
நீர்மையால் மக்க ளின்பால்
     நிறைபுகழ் கொண்டார் நெஞ்சே


அன்னவர் தூய்மை கண்டே
     ஆனந்தங் கொண்ட மக்கள்
பொன்னனை முஹம்ம தென்றே
     புகழ்ந்திட லானார் நெஞ்சே


நம்பிக்கைக் குரியார் முஹம்மத்
     நல்லெண்ணம் உடையார் என்ற
செம்மொழி யாலே அங்கு
     சிறந்திட லானார் நெஞ்சே


ஏழையர், எளிய வர்க்கே
     இரக்கத்தால் உதவி செய்தல்
வாழ்க்கைக்கே உரிய தென்று
     வளர்ந்திட லானார் நெஞ்சே


இருபத்து மூன்றாம் ஆண்டை
     எய்திட லானார் உள்ளக்
கருத்தினில் ஒளியும் பெற்றே
     கனிந்திட லானார் நெஞ்சே


அறபதன் கீழ்மை தன்னை
     ஆய்ந்திட லானார் மக்கள்
முரண்படு துன்பில் வீழ்ந்தே
     மூழ்கிய நிலையக் கண்டார்


மூடத்தைப் போற்றி செய்யும்
     மக்களின் முரணைக் கண்டே
வாடிட லானார், நாளும்
     வருந்தியே நின்றார் நெஞ்சே


ஓரிறை வழிபா டின்றி
     ஓர்நூறு தெய்வம் வைத்தே
போரிட்டு மக்கள் வீழ்ந்த
     புன்மையும் என்னே நெஞ்சே


ஒற்றுமை இல்லா வண்ணம்
     ஓயாது சண்டை யிட்டு
வெற்றுக்கு மாய்ந்த மக்கள்
     விபரீதம் பெரிதே நெஞ்சே

 

கொலைகளைச் செய்தல் மற்றும்
     குடித்திட்டுப் பெண்கள் தம்மை
விலைப்பொரு ளாகக் கொண்ட
     விந்தையும் என்னே நெஞ்சே


பெண்ணெனப் பிறந்து விட்டால்
     புதைக்குழி என்று சொல்லும்
கண்மூடிச் செயல்தான் ஆங்கே
     காலூன்றக் கண்டார் நெஞ்சே


குடிக்காத மக்கள் எல்லாம்
     குடிமக்கள் ஆகார் என்ற
கொடியதோர் நிலையால் வள்ளல்
     கொதித்திட லானார் நெஞ்சே


பாவத்தின் உறவ னைத்தும்
     பாசத்தால் ஒன்று சேர்ந்து
தாவியே அறபு நாட்டில்
     தங்கிடக் கண்டார் நெஞ்சே