பக்கம் எண் :

44

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

ஹிஜ்ரத் செய்தல்

அவ்வாறே செய்வோம் என்று
      அனைவரும் ஒப்பம் தந்தே
பௌவிய மாக ஆங்கே
      பதுங்கிட லானார் நெஞ்சே

இறை செய்தி வந்தது

நண்பர்கள் எல்லாம் சென்றார்
      நாம்என்று செல்வ தென்றே
எண்ணியே நாய கந்தான்
      இருந்திட லானார் நெஞ்சே


இந்தவோர் நிலையில் வந்த
      இறைவனின் செய்தி தன்னை
அந்தமாய்ச் சொல்லு கின்றேன்
      அதனைக்கேட் பாயென் நெஞ்சே


நபியே!நீர் தனித்தி ருக்கும்
      நல்லிர வதனில் கொல்ல
அபுஜஹில் கூட்டத் தார்கள்
      ஆங்குளர் என்றான் நெஞ்சே


பின்னேர இரவில் உம்மைக்
      கொல்லவே வருவார் நீர்தான்
முன்னேரம் மதினா நோக்கிச்
      செல்லுக! என்றான் நெஞ்சே


நபிகள்இச் செய்தி கேட்டு
      நல்லிறை அருளை வாழ்த்தி
அபுபக்கர் இல்லம் நோக்கி
      அவர்நடந் தாரே நெஞ்சே


தாளிட்ட கதவைத் தட்ட
      தண்ணொளி அபுபக் கர்தாம்
ஆள்யாரோ? என்றே நிற்க
      அண்ணல்,‘நான்’ என்றார் நெஞ்சே


அம்மொழி கேட்ட துந்தான்
      அளப்பரும் இன்பங் கொண்டு
விம்மிதத் தோடு வந்தே
      வருக!என் றாரே நெஞ்சே


இல்லத்தின் உள்ளே சென்று
      இணையிலா அல்லாஹ் தந்த
நல்லஅச் செய்தி தன்னை
      நவின்றிட லானார் நெஞ்சே


அப்படி யாமோ? என்றே
      அதிசயம் கொண்ட தோடு
இப்படித் துன்ப மாமோ?
      என்றுரு கிட்டார் நெஞ்சே


அண்ணலே உங்க ளோடு
      அடியேனும் வருவ தற்கு
எண்ணியே துடிக்கின் றேன்நான்
      ஏற்பீரோ? என்றார் நெஞ்சே


வருக!என் றேஅண் ணல்தாம்
      வாய்விட்டுச் சொல்லக் கேட்ட
பெருமகன் அபுபக் கர்தான்
      பேரின்பங் கொண்டார் நெஞ்சே


அன்புள்ள நபியே! இந்த
      அல்லலை அறிந்தே நானும்
முன்பிரு ஒட்ட கங்கள்
      முடித்துளேன் என்றார் நெஞ்சே

தாங்கள்தாம் அவற்றில் ஒன்றைத்
      தடையின்றி ஏற்பீர் என்றே
தாங்கொணா வேட்கை யோடு
      சாற்றிட லானார் நெஞ்சே


அதன்விலை ஏற்பீ ராயின்
      அதனையாம் கொள்வோம் என்றே
இதமிக அண்ணல் சொன்ன
      நேர்மையும் என்னே நெஞ்சே


சரியென்றே அபுபக் கர்தான்
      சாற்றிட அண்ண லுந்தான்
இரவின்பின் பகுதி தன்னில்
      வருகின்றேன் என்றார் நெஞ்சே

 

ஆயத்த மாக நீவிர்
      அப்பொழு திருக்க வேண்டும்
தூயவன் அருளால் செல்வோம்;
      சொல்கின்றேன் என்றார் நெஞ்சே


அபுபக்கர் இல்லம் விட்டு
      அலியுடன் வீடு சென்ற
நபிகளின் நிலையை இங்கு
      நவில்கின்றேன் கேளாய் நெஞ்சே


இரவினில் இதயம் ஒத்த
      இருவரும் இல்லத் திற்குள்
இறைவனைத் தொழுத வண்ணம்
      இருந்திட லானார் நெஞ்சே


இறைதூதரை இல்லம் புகவிட்டு
வளைத்துக்கொண்ட பயங்கர நிலை

எல்லையில் களிப்பி னோடு
      இருந்திட்ட அபுஜ ஹில்தான்
சொல்லிய வண்ணம் அண்ணல்
      சேர்ந்ததும் சூழ்ந்தான் நெஞ்சே


பாய்ந்திடும் புலிகள் போல
      பகைவர்கள் நபிக ளாரைச்
சாய்த்திடும் எண்ணத் தோடு
      சார்ந்ததும் என்னே நெஞ்சே


உருவிய வாட்கள் கையில்
      ஒளியினை உமிழ அண்ணல்
வருவாரே என்றே வீட்டை
      வளத்திட லானார் நெஞ்சே


சுற்றியே நின்ற அன்னார்
      சொல்லொணாப் பகைமை தன்னை,
முற்றிய கோபந் தன்னை
      மொழிந்திட லாமோ நெஞ்சே


பெருமானார் இல்லந் தன்னைப்
      பகைவர்கள் பின்னிச் சூழ்ந்தே
ஒருவழி இல்லா வண்ணம்
      உன்னிப்பாய் நின்றார் நெஞ்சே

 

எவ்வழி வருவார் பார்ப்போம்;
      எங்ஙனம் பிழைப்பார் என்றே
செவ்விழி யோடு அன்னார்
      சினந்ததும் என்னே நெஞ்சே


அடுத்தென்ன நிகழு மென்றே
      அறிந்திட முடியா வண்ணம்
நெடுவரை வளைத்த தென்ன
      நின்றதும் என்னே நெஞ்சே


நள்ளிருள் போர்வை பூண்ட
      நானிலம் உறங்கும் அந்த
கொள்ளையர் நெஞ்ச மெல்லாம்
      கொடுமையை எண்ணும் நெஞ்சே


வானத்து மீன்கள் அன்னார்
      வாஞ்சையில் செயலைக் கண்டே
மோனமாய்ப் பரிக சித்தே
      மின்னிய தென்னே நெஞ்சே

 

திங்கள்அக் கொடுமை கண்டு
      திரையெனும் மேகத் திற்குள்
பொங்கொளி முகம றைத்தே
      போனம் என்னே நெஞ்சே


வாளேந்தி நின்ற அந்த
      வாய்மையில் லாத கூட்டம்
மாளுவார் நபியார் என்றே
      மகிழ்ந்ததும் என்னே நெஞ்சே


நானேதான் கொல்வேன் என்றே
      நரியனை ஒருவன் சொல்ல
நானேதான் என்பான் மற்றோன்
      நலிவதும் என்னே நெஞ்சே


இவ்விதம் இவர்கள் எல்லாம்
      இரவோடு நாய கத்தை
எவ்வித மேனும் கொல்வோம்
      என்றிருந் தாரே நெஞ்சே

 

வீணர்கள் பேசும் அந்த
      வித்தகப் பேச்சைக் கேட்டே
ஆணவ அபுஜ ஹில்தான்
      ஆடிய தென்னே நெஞ்சே


தப்பிக்க முடியா வண்ணம்
      தகுதியாய்ச் சிக்கிக் கொண்டார்
எப்பக்கம் செல்வார் பார்ப்போம்
      என்றவன் நின்றான் நெஞ்சே


வீரர்கள் துடிது டித்தே
      வெட்டுவேன் நான்! நான்! என்ன
வீரர்கள் இடத்திற் சென்றே
      பொறு, பொறு! என்றான் நெஞ்சே


இரவுதான் கழியும் போதே
      இன்னுயிர் நீங்க வேண்டும்
பரந்திட வேண்டும் பிந்தி
      இரவினில் பார்ப்போம் என்றான்

 

ஓடிட வழியோ இல்லை
      உங்களுக் கேனோ ஐயம்?
கூடிய தின்று பின்பு
      கலக்கம்ஏன்? என்றான் நெஞ்சே


இரவதன் இயக்கம் ஆங்கே
      இருவிழி மூடச் செய்யும்
அரவங்கள் ஓய ஆங்கே
      அவர்கள்நின் றாரே நெஞ்சே


முற்றுகையிட்ட வேளை நபிகளாரும் அலி அவர்களும்
இல்லத்திற்குள் உரையாடிக்கொள்கின்றனர்


பகைவர்கள் சூழ்ந்த அந்தப்
      பயங்கர வேளை தன்னில்
தகைமிகு வள்ளல் உள்ளே
      கண்டதைக் கேளாய் நெஞ்சே


குறைஷியர் கூட்டஞ் சூழ்ந்து
      கொடுமைசெய் நிலையை எல்லாம்
இறைவன்தான் வள்ள லுக்கே
      இயம்பிய தென்னே நெஞ்சே

 

பழக்கமாய் நீர்ப டுக்கும்
      படுக்கையில் படுக்க வேண்டாம்;
எழும்புக! மதினா வுக்கே
      இரவினில் என்றான் நெஞ்சே


இறைவனும் வள்ள லுக்கே
      இயம்பிய தென்னே நெஞ்சே
குறைவிலாக் கடலாம் அல்லாஹ்
      கருணையும் என்னே நெஞ்சே


பகைவர்கள் திட்டம் பற்றி
      பயமதைக் கொள்ளா வண்ணம்
தகவுடன் எழுக! என்ற
      தயையதும் என்னே நெஞ்சே


இறையையே தஞ்ச மென்றே
      இருந்தநல் நபிதான் அல்லாஹ்
குறைவற்ற அன்பைக் கண்டு
      குதூகலம் கொண்டார் நெஞ்சே


இல்லத்துள் துணையாய் நின்ற
      இணையிலா அலி இடத்து
வல்லவன் வாக்கைப் பற்றி
      விளக்கிட லானார் நெஞ்சே


அலியேஎன் போர்வை கொண்டே
      அல்லாஹ்வின் அருளை வாழ்த்தி
நலிவின்றித் துயில்வீர் என்றே
      நவின்றிட லானார் நெஞ்சே


பகைவர்கள் விடியற் காலம்
      பார்ப்பார்கள்; ஆனால் எந்த
வகையான தீமை யுந்தான்
      வந்திடா தென்றார் நெஞ்சே


காப்புக்குக் கொடுத்து வைத்த
      காசுப்பை இதனைப் பாது
காப்பாக உரியோ ரின்பால்
      கொடுத்திடு என்றார் நெஞ்சே

 

நடுங்கும்அவ் வேளை தன்னில்
      நாணயம் வேண்டி நின்ற
கொடைவள்ளல் நாய கத்தின்
      குணமதும் என்னே நெஞ்சே


இப்பொழு திந்த வேளை
      இறைவனால் மதினா நோக்கி
ஒப்பியே செல்லு கின்றேன்;
      உடனேவா என்றார் நெஞ்சே


கதவினை அடைத்துக் கொண்டு
      களிப்புடன் இருப்பாய் எந்த
விதத்திலும் அச்சம் இல்லை
      என்றுரைத் தாரே நெஞ்சே


பகைவர்கள் என்னைப் பற்றிப்
      பரபரப் பாகக் கேட்டால்
முகம்மது எங்கே? என்பாய்
      என்று சொன்னாரே நெஞ்சே


அப்புறம் அவர்கள் எல்லாம்
      அகலுவார் என்றே ஓதி
அப்பெரும் வள்ளல் சொன்ன
      அதிசயம் என்னே நெஞ்சே


வெளிச்செலும் முன்னம் அல்லாஹ்
      வேண்டுதல் புரிந்து வள்ளல்
ஒளிமிகு கண்க லங்க
      உருகிநின் றாரே நெஞ்சே


வெளியிலே பகைவர் கூட்டம்
      விழித்திமை மூடா வண்ணம்
வெளிவரு வாரா? என்றே
      விழித்திருக் கின்றார் நெஞ்சே


புனிதஞ்சேர் அந்த வேளை
      ‘புறப்படு’ என்றே அல்லாஹ்
கனிவுடன் சொல்ல அண்ணல்
      கதவினைத் திறந்தார் நெஞ்சே

 

கதவினைத் திறக்க ஆங்கே
      கையினில் வாளைக் கொண்டே
இதயமில் லாதார் நிற்க
      இன்நபி கண்டார் நெஞ்சே


இறைவனை நெஞ்சில் எண்ணி
      இருவிழி திறந் பார்க்க
மறையருள் அல்லாஹ் வின்நல்
      மகிமையைக் கண்டார் நெஞ்சே


காவலர் எல்லாம் எங்கே?
      கண்மூடி அசைவே இன்றி
மேவிய கல்லைப் போன்றே
      நின்றதும் என்னே நெஞ்சே


அச்சமில் லாமல் அண்ணல்
      அவர்களின் இடையில் சென்ற
மெச்சுமோர் புதுமை தன்னை
      விளக்குவ தாமோ? நெஞ்சே

 

நின்றஅந் நிலையில் அன்னார்
      நீள்விழி மூடி நின்றார்
என்றால்அவ் விறைவன் மாண்பை
      என்னென்பாய் சொல்வாய் நெஞ்சே


ஓங்கிய வாட்க ளோடு
      உள்ளஅவ் வீரர் முன்பு
தேங்காமல் அண்ணல் சென்ற
      தேசதும் என்னே நெஞ்சே


பகைவர்கள் குவிந்து நிற்க
      பயமதே இல்லா வண்ணம்
அகத்துள உறுதி யோடு
      அவர்சென்ற தென்னே நெஞ்சே


அலியவர் அண்ணல் செல்லும்
      அதிசயம் தன்னைக் கண்டே
உள்ளத்தில் கொண்ட இன்பை
      உரைப்பதோ? சொல்வாய் நெஞ்சே

 

வள்ளலை வழிஅ னுப்பி
      வாசலை அடைத்துக் கொண்டே
அல்லாஹ்வை நினைத்த வண்ணம்
      அலிசெல்வ தானார் நெஞ்சே


வீதியில் வந்த அண்ணல்
      விலகவே முடியா அந்த
ஜோதிசேர் கஅபா கண்டு
      துக்கமே கொண்டார் நெஞ்சே


தொழுகைசெய் கஅபா தன்னைத்
      துறந்துமே பிரிவ தற்கு
முழுமனம் இல்லா வண்ணம்
      முற்றிலும் சோர்ந்தார் நெஞ்சே


செல்கின்றோம் மீண்டும் இங்கு
      சேர்வோமா? என்றே வள்ளல்
அல்லலில் அழுந்தி நின்ற
      அவலமும் என்னே நெஞ்சே

 

தாயினைப் பிரியும் சேயின்
      தவிப்பதைப் போன்றே வள்ளல்
நாயகம் நின்ற தைத்தான்
      நவிலுவ தாமோ நெஞ்சே


கண்களில் நீர்தான் மல்க
      கஅபாவை அண்ணல் நோக்கி
புண்பட்டே சொன்ன வற்றைப்
      புகல்கின்றேன் கேளாய் நெஞ்சே


கஃபாவே! உன்னை நீங்கிக்
      கழிவதோ? மாட்டேன் அந்தோ!
இஃதென்ன துன்பம்? என்றே
      இளகிட லானார் நெஞ்சே


ஆயினும் கடனை எண்ணி
      அவன்துணை உண்டே என்று
போயினார் என்றால் அந்தப்
      பொலிவதும் என்னே நெஞ்சே

 

அபுபக்கர் இல்லம் நோக்கி
      அச்சமே இல்லா வண்ணம்
நபிகள்தாம் சென்று நின்ற
      நலமதும் என்னே நெஞ்சே


அன்பபூ பகரே! வந்தேன்
      அவசரம்; ஒட்ட கங்கள்
முன்புரைத் திட்ட வண்ணம்
      உளதா?என் றாரே நெஞ்சே


பெருமானே! உள்ள தென்றே
      பெட்புடன் அவைகள் தம்ம
அருகினில் கொண்டு வந்து
      நிறுத்திட லானார் நெஞ்சே


இருவரும் ஏறிக் கொண்டே
      இரவோடு இரவ தாக
அருமதி னாவை நோக்கி
      அகன்றிட லானார் நெஞ்சே

 

சிறிதுநே ரத்திற் குள்ளே
      சென்றுமே *‘தௌர்’என் றோதும்
செறிமலைப் பொதும்புக் குள்ளே
      சேர்ந்ததைக் கேளாய் நெஞ்சே

* தௌர் - மக்காவிலிருந்து தென்மேற்குப்பாதையின் மூன்றாவது மைலில் உள்ள ஒரு மலைக்குகை.


பொதும்பினுள் அபுபக் கர்தான்
      புகுந்துமே சுத்தம் செய்தே
அதன்பிற கேநம் அண்ணல்
      அங்குசென் றமர்ந்தார் நெஞ்சே


பொதும்பினுள் இருந்த தான
      பொந்துகள் தமைஅ டைக்க
அதுசம யத்தில் ஆங்கே
      உதவிய தென்னே நெஞ்சே


இருந்தஅத் துளைகள் தம்மை
      இவ்வாறு மூட ஆங்கே
இருந்தஓர் துளையை மூட
      என்செய்தார் கேளாய் நெஞ்சே


பெருவிரல் அதனை அந்தப்
      பொந்ததில் பிணைத்து விட்டு
ஒருதுயர் இல்லை என்றே
      உரைத்திட லானார் நெஞ்சே


அண்ணலார் அயர்வு நீங்க
      அபுபக்கர் மடியின் மீது
கண்ணுறங் கிட்ட அந்தக்
      காட்சியும் என்னே நெஞ்சே


இவ்வாறே உறங்கும் போது
      இதயத்தை வாட்டும் ஒன்று
எவ்வாறோ நேர்ந்த தைத்தான்
      இயம்பிடக் கேளாய் நெஞ்சே


துளையதைக் காலால் மூடி
      தூக்கத்தைக் காக்க அங்கு
வெளிவரத் டித்த பாம்பின்
      விஷமந்தான் என்னே நெஞ்சே

 

அபுபக்கர் விரலை அந்த
      அரவம்தீண் டியதே நெஞ்சே!
அபுபக்கர் விரலை மீண்டும்
      அதுகடித் ததுவே நெஞ்சே


விரல்தனை வெளியி ழுத்தால்
      விபரீதம் தோன்றும் என்றே
அரவது மேலும் தீண்ட
      அமர்ந்ததும் என்னே நெஞ்சே


உடலெல்லாம் நஞ்சு மேவ
      உள்ளத்தில் கலக்க மின்றி
திடமுடன் அவரி ருந்த
      தீரமும் என்னே நெஞ்சே


வேதனை ஓர்பால் அண்ணல்
      விழிப்பரோ? என்றே எண்ணும்
சோதனை ஓர்பால் நெஞ்சில்
      சொல்லொணாத் ன்பம் நெஞ்சே


நாம்மடிந் திட்ட போதும்
      நாயகம் பிழைக்க வேண்டும்
பாம்பினை வெளியே விட்டால்
      பாவம்என் றாரே நெஞ்சே


இவ்வாறு மனத்தில் கொண்ட
      இடையறாப் போராட் டத்தில்
எவ்வாறு அமைதி வாய்க்கும்?
      எல்லையில் துன்பம் நெஞ்சே


நாம்இறக் கப்போ கின்றோம்
      நாயகம் தன்னைக் காப்போம்
ஆம்!அது வேநல் திட்டம்
      அமைவோம்என் றாரே நெஞ்சே


நாகமோ கோபங் கொண்டு
      நஞ்சினை மேலும் ஏற்ற
ஏகமாய் வாதை மேவ
      என்னசெய் வதுசொல் நெஞ்சே

 

அபுபக்கர் அழுது விட்டார்
      அவருடைக் கண்ணீர் வெள்ளம்
நபிகளின் மீது வீழ
      நடந்ததைக் கேளாய் நெஞ்சே


நீர்த்துளி பட்ட அண்ணல்
      நெகிழ்ந்துமே எழுவ தானார்
பார்த்தனர் அவர்மு கத்தை
      பதைபதைத் தாரே நெஞ்சே

என்ன?ஏன்? அழுகின் றீர்கள்
      ஏகனும் மறப்பா னாமோ?
இன்னலைச் சொல்வீ ரென்றே
      இயம்பிட லானார் நெஞ்சே

      
சொல்லவே மனமில் லாமல்
      சோகத்தால் சொற்கள் தம்மை
மெல்லவே வள்ளல் ஆங்கே
      மேலும் கேட்டாரே நெஞ்சே

      

விரலதை அரவம் தீண்டி
      விட்டது; அதைஎ டுத்தால்
அரவது உம்மைத் தீண்டும்
      ஆகவே... என்றார் நெஞ்சே


நஞ்சது உடலில் மேவ
      நானுமே அழுது விட்டேன்
அஞ்சற்க! என்று சொன்ன
      அன்பதும் என்னே நெஞ்சே


அண்ணலின் உயிரைக் காக்க
      அருமுயிர் வழங்கு தற்கே
எண்ணிய நண்பர் நட்பை
      எங்குகாண் பதுவோ நெஞ்சே


அனல்பட்ட மெழுகைப் போல
      அகமெலாம் உருகிப் போக
மனத்துயர் வேண்டாம் என்றே
      மாநபி சொன்னார் நெஞ்சே

 

கடிபட்ட விரலில் அண்ணல்
      களிப்புடன் உமிழ்நீ ரைத்தான்
நொடியினில் தடவ அந்த
      நோவும்சென்


இருவரும் பொதும்பின் கண்ணே
      இருந்தஅத் துளைய டைத்து
இரவினைக் கழிப்போம் என்றே
      இருந்திட லானார் நெஞ்சே


வளைத்த இல்லத்தினுள்
வம்பர்கள் புகுவதாயினர்

வள்ளலின் இல்லந் தன்னை
      வளைத்துமே நின்ற அந்தப்
பொல்லாதார் நிலையைப் பற்றிப்
      புகலுவேன் கேளாய் நெஞ்சே

வள்ளலார் பிரியும் போது
      வாளுடன் அவர்கள் எல்லாம்
நல்லஆழ் உறக்கந் தன்னை
      நாடிட லானா ரன்றோ?

 

இரவதன் பின்னே ரத்தில்
      இதயமில் அபுஜ ஹில்தான்
உரக்கவே குரலெ ழுப்பி
      உத்திர விட்டான் நெஞ்சே


தலைவனின் குரலைக் கேட்டுத்
      திடுக்கிட்ட வீரர் எல்லாம்
மலைஎன எழுந்து நின்று
      முழங்கிட லானார் நெஞ்சே


பகைவருள் ஒருவன் ஆங்கே
      பார்த்தனன் வீட்டி னுள்ளே
முகம்மது கட்டில் மீதே
      உள்ளனர் என்றான் நெஞ்சே


பசை்சயாய்ப் போர்வை போர்த்திப்
      படுத்துமே உறங்கு கின்றார்
இச்சம யத்தில் கொல்வோம்
      என்றிட லானான் நெஞ்சே

 

அபுஜஹில் ஆமாம் என்றே
      ஆர்த்துமே ‘பகைமை எல்லாம்
நபிதலை யோடு மாயும்’
      நல்லதென் றானே நெஞ்சே


இத்தகைப் பகைமை கொள்ளும்
      இதயமில் அபுஜ ஹில்தான்
உத்தமர் முகமுன் தோன்ற
      துணிவதைக் கொள்வா னாமோ?

அருகிலே நின்றோர் பக்கம்
      அன்புள்ளீர் நீங்கள் இன்னும்
ஒருநொடி பொறுக்க வேண்டாம்
      உட்செல்வீர் என்றான் நெஞ்சே

      
உதைத்துமே கதவைத் தள்ளி
      ஒன்றாக வீரர் எல்லாம்
பொதுமையாய் வீட்டிற் குள்ளே
      புகுந்திட லானார் நெஞ்சே

      
வருவதை அறிந்தி ருந்த
      வலிமைசேர் அலியார் ஆங்கே
ஒருவிதக் கலக்க மின்றி
      செய்ததைக் கேளாய் நெஞ்சே

      
புகுந்தவர் அணுகு முன்னம்
      போர்வையைச் சிறிது நீக்கி
நகுமுகத் தோடு ஆங்கே
      அமர்ந்திட லானார் நெஞ்சே


சிங்கத்தை வேட்டை ஆடச்
      சென்றவர் எல்லாம் அங்கு
பொங்கெழில் மானைக் கண்டால்
      பொறுப்பரோ? சொல்வாய் நெஞ்சே


அலியவர் முகத்தைக் கண்டே
      அடங்கொணாக் கோபங் கொண்டே
புலியெனக் குறைஷி யர்கள்
      புழுங்கிட லானார் நெஞ்சே


என்னசெய் வதுநாம் இங்கே
      ஏமாந்தோம் என்றே சொல்லி
அன்னவர் மயங்கி நின்ற
      அவலமும் என்னே நெஞ்சே


அண்ணலார் தம்மைக் கொல்ல
      ஆர்வமாய் உள்ளே சென்று
புண்பட்டுத் திரும்பி வந்தோர்
      புகன்றதைக் கேளாய் நெஞ்சே


வீட்டுக்குள் இருந்தோர் தம்மை
      விளக்கமாய்க் கண்டோம் இந்தக்
கூட்டத்தைக் கடந்தே அன்னார்
      போனாரோ? என்றார் நெஞ்சே


இரவெலாம் விழித்தி ருந்தும்
      எப்படிப் போனார் என்றே
ஒருவரை ஒருவர் மாற்றிக்
      கேட்டிட லானார் நெஞ்சே

 

முகட்டினைப் பிரித்துக் கொண்டு
      முகம்மதும் சென்றி ருப்பார்;
முகட்டினைப் பாரீர் என்றே
      முழங்கிட லானார் நெஞ்சே


அகத்துயர் நிரம்பப் பெற்றோர்
      அனைவரும் கூர்ந்து பார்க்க
முகட்டிலும் மாற்ற மில்லை
      வியப்பிதே என்றார் நெஞ்சே


விந்தையில் விந்தை யாமோ?
      விளக்கவே முடிய வில்லை
சிந்தையை மயக்கும் இந்தச்
      செய்திதான் என்றார் நெஞ்சே


சுற்றியே பார்த்து விட்டுச்
      சுழன்றிடும் விழிக ளோடு
மற்றவர் நின்ற தைத்தான்
      அலியவர் பார்த்தார் நெஞ்சே

 

உள்ளத்தில் மகிழ்வு பொங்க
      உரைத்திடும் மொழியைக் கேட்டு
வள்ளலின் மாண்பை எண்ணி
      வாழ்த்திட லானார் நெஞ்சே


நின்றஅவ் வீரர் - எல்லாம்
      நிகழ்த்திய உரையைக் கேட்டு
புன்னகை புரிந்த வண்ணம்
      புளகமுற் றாரே நெஞ்சே


அபுஜஹில் கோபங் கொண்டே
      அங்கெங்கும் தேடிப் பார்த்து
நபிஎங்கே? சொல்வாய் என்று
      நலிந்தவன் கேட்டான் நெஞ்சே


அலியவர் அதிர்ச்சி இன்றி
      அதனையே திருப்பிக் கேட்டு
வெளியிலே காவல் நானா
      செய்தனன் என்றார் நெஞ்சே

 

உள்ளதைச் சொல்ல வேண்டும்
      உமக்கது புரியு மென்று
நல்லிடி முழக்க மென்ன
      நவின்றிட லானான் நெஞ்சே


இறைவனின் தூதர் பற்றி
      இறைவனே உணர்வான்; நானோ
குறைமதி உடையேன்; என்ன
      கூறுவேன்? என்றார் நெஞ்சே


கோபத்தால் அபுஜ ஹில்தான்
      கொடுமையாய் உற்றுப் பார்த்து
நபிஎங்கே சென்றார்? என்றே
      நன்கவன் கேட்டான் நெஞ்சே

பலமுறை அபுஜ ஹில்தான்
      பயமதைக் காட்டிக் கேட்க
அலியவர் அச்ச மின்றி
      அறைந்ததைக் கேளாய் நெஞ்சே

      

மலையென நின்றோ ரெல்லாம்
      மடியவா செய்தீர்? இங்கு
வலிமையாய்க் காவல் நின்றும்
      வகையறி யீரோ? என்றார்

      
அலியவர் கேள்வி கட்கே
      அளித்திடும் பதிலில் லாமல்
சிலிர்த்திட்ட அபுஜ ஹில்தான்
      சினந்திட லானான் நெஞ்சே

      
அலியினைக் கொல்ல வேண்டும்;
      ஆம்!என்றே ஒருவன் சொல்ல,
புலியினை இழந்து பூனை
      உயிர்கொள்வ தாமோ? என்றான்


பிறிதொரு வீரன் சொல்ல
      பின்னவர் எல்லாம் ஆமாம்
சரியென்றே தெளிவு கொண்டு
      வெளிவர லானார் நெஞ்சே


முகம்மதைப் பிடிப்ப தற்கு
      முயற்சிகள் செய்வோ மென்றே
அகமெலாம் கறுத்த வண்ணம்
      அவர்எழும் பினரே நெஞ்சே


நபிஎங்கே? எங்கே? என்று
      நவின்றஅம் மொழியைக் கேட்டு
நபிஎங்கே என்றே மக்கள்
      கேட்டிட லானார் நெஞ்சே


ஊரெலாம் இந்தச் செய்தி
      உடனடி யாகச் செல்ல-
பாரெல்லாம் அல்லாஹ் வின்நற்
      பான்மைஎன் றாரே நெஞ்சே


சிலர்இந்தச் செய்தி கேட்டு
      சிந்தனை செய்வ தானார்
சிலரிதை மாயம் என்றே
      செப்பிட லானார் நெஞ்சே

 

புதிராக இருந்த அந்தப்
      புலர்ந்திடும் வேளை தன்னில்
கதிரவன் கிழக்கு வானில்
      களிப்பாய்வந் ததுவே நெஞ்சே


முகம்மதை இழந்த அந்த
      முனிவினால் அபுஜ ஹில்தான்
முகமது கருத்த வண்ணம்
      முழங்கிட லானான் நெஞ்சே


அபுபக்கர் இல்லம் சென்றே
      அவர்அங்கு இல்லை என்ன
நபியோடு சென்றார் என்றே
      நடந்திட லானான் நெஞ்சே


இத்தனைத் தடையி ருந்தும்
      இருவரும் சென்று விட்டார்
எத்துணைத் துணிவு என்றே
      ஏங்கிட லானான் நெஞ்சே

 

குறைஷியர் விழிகள் எல்லாம்
      கோபத்தால் நெருப்பே ஆக
நிறைவிலா நிலையில் பொங்கிப்
      புழுங்கிட லானார் நெஞ்சே


பார்க்கின்றேன்! பார்;பார்; என்றே
      படபடத் திட்ட தோடு
ஆர்த்திட்ட அபுஜ ஹில்தான்
      அறைந்ததைக் கேளாய் நெஞ்சே


முகம்மதைப் பிடித்து வந்தென்
      முன்னேவைப் போருக் கிங்கு
தகவுடன் பரிச ளிப்பேன்;
      தவறாதென் றானே நெஞ்சே


ஒட்டகம் நூறு வேண்டின்
      உறுதியாய் முகம்ம தைத்தான்
கட்டியே கொணர்வீ ரென்று
      கத்திட லானான் நெஞ்சே

 

செய்தியைக் கேட்டோ ரெல்லாம்
      சேர்கின்ற பரிசை எண்ணி
உய்வாரோ? பார்ப்போம் என்றே
      தேடிட லானார் நெஞ்சே


இளைஞர்கள் குதிரை யேறி
      இங்குமங் குஞ்சென் றிட்டார்
வளைப்போமே என்றே அன்னார்
      பறந்திட லானார் நெஞ்சே

காடுகள், கழனி மற்றும்
      கண்டபல் இடத்தில் எல்லாம்
தேடியே அலைந்த தைத்தான்
      தெரிவிக்க லாமோ நெஞ்சே


குதிரைகள், ஒட்ட கங்கள்
      கூர்ந்துமே தேடும் போது
அதிராத வள்ளல் செய்த
      அதிசயம் கேளாய் நெஞ்சே

 

பொம்பின் வாயிலில்
பொல்லாப் பகைவர்கள்


வள்ளலும் தோழர் தாமும்
      வாய்த்தஅப் பொதும்பி னுள்ளே
உள்ளஅந் நிலைமை தன்னை
      உரைத்திடக் கேளாய் நெஞ்சே


அபுபக்கர் சொல்லி வத்த
      வண்ணமே ‘ஆமிர்’ தாமும்
நபிகளைக் காண வேண்டி
      நடந்துவந் தாரே நெஞ்சே


ஆமிர்அவ் வேளை தன்னில்
      ஆடொன்ற ஓட்டி வந்து
தாம்கறந் திட்ட பாலைத்
      தந்ததும் என்னே நெஞ்சே


பால்தனைத் தந்த ஆமிர்
      பற்பல செய்தி சொல்லி
காலடி தெரியா வண்ணம்
      கடுகிட லானார் நெஞ்சே

 

ஒருவரும் அறியா வண்ணம்
      உத்தமர் ஆமிர் ஆங்கே
விரைந்திடப் பகைவர் கூட்டம்
      வந்ததைக் கேளாய் நெஞ்சே


பாலையில் தேடித் தேடிப்
      பார்த்தஓர் கூட்ட மொன்று
மேலவர் பொதும்பை நோக்கி
      மெல்லவந் ததுவே நெஞ்சே


ஆங்குள பொதும்பை எல்லாம்
      அலசியே பார்த்து விட்டுத்
தாங்கொணா அலுப்பி னோடு
      *‘தௌர்’பக்கம் வந்தார் நெஞ்சே

* தௌர் - நாயகமும் தோழரும் தங்கி உள்ள பொதும்பின் பெயர்.


வந்தவர் பேசும் பேச்சின்
      விவரத்தைக் கேட்கக் கேட்க
சிந்தையில் அபுபக் கர்தான்
      சோர்ந்திட லானார் நெஞ்சே


நெருக்கடி மிகுந்த அந்த
      நேரத்தில் நெஞ்சில் தோன்றிப்
பெருகிய அச்சந் தன்னைப்
      பேசிட லாமோ நெஞ்சே


பொதும்பதன் வாயி லின்கண்
      பகைவர்கள் நெருங்கி நிற்க
எதுநடந் திடுமோ? என்றே
      எண்ணிட லானார் நெஞ்சே


ஆடுகள் மேய்த்துக் கொண்டே
      அண்டையில் நின்றோ னின்பால்
நாடியே ‘இருவர் இங்கு
      சென்றாரோ?’ என்றார் நெஞ்சே


எதிரிகள் கேட்கும் இந்தக்
      கேள்வியை எண்ணி ஆங்கே
அதிர்ச்சியை அபுபக் கர்தான்
      அடைந்திட லானார் நெஞ்சே


வெளியினில் கேட்ட அந்த
      வினாக்களைக் காதில் கேட்டுத்
துளியுமே உணர்வில் லாமல்
      துடித்திட லானார் நெஞ்சே


துடித்திடும் நிலையில் தோழர்
      தூதரின் கரம்பி டித்தே
அடிமனம் உருகக் கேட்ட
      அருமுரை கேளாய் நெஞ்சே


நெஞ்சினில் நிறைந்தி ருக்கும்
      நிறையருட் கடலே! நாமும்
அஞ்சியே நிற்ப தாமோ?
      அருளுக! என்றார் நெஞ்சே


நிறைநபி நெஞ்ச மெல்லாம்
      நெகிழ்ந்திடும் வண்ணம் வல்ல
இறைவனை வேண்டி ஆங்கே
      இறைஞ்சிட லானார் நெஞ்சே

 

வேண்டுதல் முடிந்த துந்தான்
      விடைசொன்ன இடைய னுந்தான்
ஆண்டவன் அருளால் மாறி
      அறைந்ததைக் கேளாய் நெஞ்சே


எவரையும் காணேன் இங்கு
      எவர்வந்தார்? இல்லை என்றே
அவனுரைத் திடவே அண்ணல்
      அகமகிழ்ந் தாரே நெஞ்சே


பகைவர்கள் கூர்ந்தே அந்தப்
      பக்கத்தைப் பார்த்த வண்ணம்
அகலாமல் மேலும் மேலும்
      ஆய்ந்திட லானார் நெஞ்சே


அபுபக்கர் தலையைத் தூக்கி
      அப்பக்கம் பார்த்து விட்டு
நபியேஅப் பகைவர் வாயில்
      வந்துளர் என்றார் நெஞ்சே


அடுத்தென்ன நிகழு மாமோ
      அறியோமே என்றே ஆங்கு
நடுங்கிய அபுபக் கர்தான்
      நவின்றதைக் கேளாய் நெஞ்சே


குகையினில் இருவர் மட்டும்
      குறியாகச் சிக்கிக் கொண்டோம்
பகைவர்கள் அதிகம் என்றே
      பதைபதைத் தாரே நெஞ்சே


இருவரோ இருக்கின் றோம்?நம்
      இறைவனும் உள்ளா னென்றே
பருவரல் சிறி மின்றிப்
      பகர்ந்ததும் என்னே நெஞ்சே


இவ்வாறே அண்ண லும்தான்
      இயம்பிய நொடியில் ஆங்கு
எவ்வாறு இறைவன் அன்பும்
      எழுந்தது பாராய் நெஞ்சே!

 

பொதும்பதன் வாயி லின்கண்
      பூச்சியாம் சிலந்தி ஒன்று
அதுவேளை வலையைப் பின்னி
      அடைத்ததும் என்னே நெஞ்சே


வள்ளலைத் தேடிக் கொண்டு
      வந்தஅக் குழுவி னுள்ளே
உள்ளவோர் கொடியோன் சொன்ன
      உரைகளைக் கேளாய் நெஞ்சே!


எங்குமே தோன்றா வண்ணம்
      எங்குபோ யிருப்பார்? நாமும்
எங்கினிச் செல்வ தென்றே
      ஏங்கிட லானான் நெஞ்சே


ஒட்டகம் நூறும் பெற்று
      உவக்கலாம் என்றே நாமும்
எட்டெட்டுத் திக்கும் சென்றோம்
      ஏமாந்தோம் என்றான் நெஞ்சே

 

பொறு;பொறு; தோழா! இந்தப்
      பொம்பினைப் பார்ப்போம் என்றே
அருகினில் வந்தும் உள்ளே
      நுழைவோமா? என்றான் நெஞ்சே


நுழைந்திடும் நோக்கம் கொண்டு
      நுண்மையாய் நோக்கும் போது
அலந்திட்ட அவர்கள் கண்ட
      அதிசயம் கேளாய் நெஞ்சே


வாயிலில் சிலந்திப் பூச்சி
      வலயதைக் கண்ட தாலே
போயிருப் பாரோ? உள்ளே
      முடியாதென் றுரத்தான் நெஞ்சே


மலப்புடன் நிற்கும் போது
      மற்றுமோர் விந்தை தன்னை
தலைவன்தான் ஆங்கே கண்டு
      தவிப்பதைக் கொண்டான் நெஞ்சே!

 

பொதும்பதன் பக்கந் தன்னில்
      புதுமையாய் மரத்தின் மீது
எதிர்பாரா விதமாய்க் காட்டுப்
      புறாஇருந் ததுவே நெஞ்சே!


சிலந்தியும் மணிப்பு றாவும்
      சீராக வாழும் போது
வலிமைமு ஹம்மத் இங்கே
      வருவதற் கில்லை என்றான்


மனிதர்கள் தொடர்பில் லாத
      மரத்தினில் வாழும் இந்தப்
புனிதப்பு றாக்கள் கண்டோம்;
      போவோம்என் றானே நெஞ்சே


குதிரைகள் எழுப்பி வைத்த
      குளம்பொலி கேட்ட பின்பே
அதிர்ச்சியில் மீண்டே மூச்சை
      அபுபக்கர் விட்டார் நெஞ்சே

 

அண்ணலின் அமுத வாயில்
      அந்நேரம் வந்த தான
பொன்மொழி யதனை இங்கு
      புகன்றிடக் கேளாய் நெஞ்சே


எல்லாம்அவ் வல்லான் அன்பே
      ஏதுரைத் திடுவேன் என்றே
சொல்நன்றி ஆற்றி நின்ற
      சோபிதம் என்னே நெஞ்சே


நன்றியில் பிறந்த அந்த
      நபிமொழி தன்னைக் கேட்டு
இன்முக அபுபக் கர்தான்
      மகிழ்ந்ததும் என்னே நெஞ்சே


துன்பத்தில் துணையி ருக்கும்
      தூய்மைசேர் அன்பு நெஞ்சின்
அன்பினால் அபுபக் கர்தான்
      அமைதியைக் கண்டார் நெஞ்சே

நட்பெனும் இலக்கி யத்தை
      நாயகம் மூலம் கண்ட
பெட்பினால் அபுபக் கர்தான்
      பெருமைகொண் டாரே நெஞ்சே


இவ்வாறு மூன்று நாட்கள்
      இருவரும் குகையி னுள்ளே
எவ்வித இடரு மின்றி
      இருந்திட லானார் நெஞ்சே


அபுபக்க ருக்கு வேண்டும்
      அந்தநல் ஆமிர் வந்தே
நபிகளுக் குப்பா லைத்தான்
      நல்கிய தென்னே நெஞ்சே


அபுபக்கர் மைந்த ரான
      அப்ல்லாஹ் இரவில் வந்தே
நபிகள்பால் செய்தி தன்னை
      நவின்றிட லானார் நெஞ்சே!