தவம்
மான்கொண்ட கண்ணியர் மையலற் றேதவ
வன்மைமரீஇ
ஊன்கொண்ட துன்பை யொழிக்கத்
தலைப்படும்
உத்தமர்காள!
வான்கொண்ட வுச்சி வரைமுழை
யுற்று
மயர்வதெவன்
கான்கொண்ட கொன்றையர்
கச்சியை யெய்திற்
கலியறுமே.
(75)
(இ - ள்.)
மான் கொண்ட கண்ணியர் - மானின் கண்கள் போன்ற கண்களையுடைய பெண்களின், மையல் அற்றே - காம மயக்கத்தை விட்ட பின்பே, தவ வன்மை மரீஇ -
தவமாகிய வலிமையுள்ள நிலையைப் பொருந்தி, ஊன் கொண்ட துன்பை - உடலிடத்துத் தோன்றும் துன்பத்தை, ஒழிக்க - ஒழிக்கும்படி, தலைப்படும் உத்தமர்காள்
- முயலும் சான்றோர்களே!, வான் கொண்ட-விசும்பளவும் ஓங்கிய, உச்சி வரை - உச்சியினையுடைய மலையிடத்துள்ள, முழை யுற்றும்-குகைகளில் தங்கியும்,
மயர்வது எவன் - மனம் மயங்குவது என்னை? கான் கொண்ட - மணத்தினைக் கொண்ட, கொன்றையர் - கொன்றை மாலையைச் சூடியருளிய ஏகாம்பரநாதர் எழுந்தருளியுள்ள,
கச்சியை எய்தின் - காஞ்சிபுரத்தை அடையின், கலி யறுமே - உங்கள் துளக்கம் (துன்பம்) ஒழியுமே.
மரீஇ - மருவி என்பதன் சொல்லிசை அளபெடை. கலி - துளக்கமாம் (கலியி னெஞ்சினேம், பரிபா. 2.
74); துன்பமுமாம்.
மனைவியரிடத்துள்ள மையலைப் பிடிவாதத்தால் நீத்துத் தவ வலிமையைத் தாங்கி, முழைகளில் மறைந்துறையினும் அம் மையல் போகாதாதலால்,
அடைதற்கியலாத பேரின்பத்தை அம் மனைவியரிடத்து மையலுடனேயே வீட்டிலுறைந்து காஞ்சிபுரத்துக் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபடின், அம் மையல் தானாக ஒழியப்
பேரின்பத்தை எளிதிலெய்தலாம் என்பது கருத்து.
‘மான்’ என்பது அதன் கண்ணிற்கு முதலாகுபெயர். ஊன் என்பது அதனாலாகிய உடம்பிற்குக் கருவியாகுபெயர்.
|