பக்கம் எண் :

124

Kachchik Kalambagam

 

பிச்சியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

என்னதவஞ் செய்தேனோ உமைக்கம்பர்
      திருக்கச்சி யிடையே காணத்
துன்னவரும் உடனீறுங் கஞ்சுளியி
     னொடுசெங்கைச் சூல முஞ்செம்
பொன்னனைய திருமேனிப் பொலிவுமே
     எனைமயங்கப் புரியுங் கண்டீர்!
அன்னநடைக் கன்னன்மொழிப் பிச்சியீர்!
     அணிமுறுவல் அதிகம் அன்றோ?                       (91)

(இ - ள்.)  அன்ன நடை - அன்னத்தின் நடைபோலும் நடையும், கன்னல் மொழி - கருப்பஞ்சாற்றின் சுவைபோலும் சுவை வாய்ந்த மொழியும் உடைய, பிச்சியீர் - பிச்சியாரே, உமை - உம்மை, கம்பர் திருக்கச்சி இடையே - ஏகாம்பரநாதர் எழுந்தருளிய திருக்காஞ்சிபுரத்திலே, காண - பார்க்க, என்ன தவம் செய்தேனோ - நான் முற்பிறப்பில் யாது தவம் செய் தேனோ, உடல் துன்ன வரும் நீறும் - உம்முடைய உடல் முழுவதும் நெருங்கப் பூசப்பெற்ற விபூதியும், கஞ்சுளியினொடு - கஞ்சுளி என்னும் பரதேசியின் கோலத்துக்குப் பொருந்திய பொக்கணப் பையினோடு, செங் கைச் சூலமும் - சிவந்த கையிலேந்திய சூலப் படையும், செம்பொன் அனைய - சிவந்த பொன்னின் நிறம்போலும் நிறம் உடைய, திருமேனிப் பொலிவும், அழகிய உடலின் விளக்கமும் (ஆகிய இவைகளே), எனை மயங்கப் புரியும் - என்னை மயங்கச் செய்யும், அணி முறுவல் அதிகம் அன்றோ - ஆயின் உம்முடைய அழகிய புன்சிரிப்பு மிகையேயாம்.

பிச்சி - பெண்பால் ஒருத்தி சிவசின்னம் பூண்டு பிச்சை எடுப்பவள்.

கஞ்சுளி - பிச்சியார் தோளில் தொங்கும் பை;  (சோளினாப் பை என இப்பொழுது வழங்கும்.)

நீறும் கஞ்சுளியும் கையிலுள்ள சூலமும் மேனியின் பொலிவும் என்னை மயங்கச் செய்யும்.  இவற்றொடு உமது அழகிய புன்சிரிப்பு மிகையேயாம்.

முன், சிவபெருமான் திரிபுரங்களைச் சிரித்து எரித்தது போல நீர் புன்முறுவல் காட்டித் துயருறச் செய்தீர் என்பது குறிப்பெச்சம்.

இது, பிச்சியாரிடத்து நயமாகப் பேசிக் காமுற்றான் ஒருவன் கூறியது.

உமை - உம்மை என்பதன் தொகுத்தல்.

கண்டீர் - முன்னிலை யசை.