கச்சிக்கலம்பக
நூலாசிரியராகிய
பூண்டி
அரங்கநாத முதலியாரின்
வாழ்க்கை
வரலாறு.
_____
இளமைப்பருவம்
“தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து”
என்று சிறப்பிக்கப்பெறும் தொண்டை நாட்டில், ‘திருவள்ளூர்’ என வழங்கும் திருவெவ்வுளூரை
யடுத்த பூண்டி என்னும் சிற்றூரைச் சார்ந்தோரும், அரசியற்றுறையில் உயர்ந்த அலுவல்
பார்த்துவந்தவருமான பூண்டி சுப்பராய முதலியா ரென்பார்க்கு, 1844-ம் ஆண்டு, பூண்டி
அரங்கநாத முதலியா ரென்பார் தவப் புதல்வனாய்ப் பிறந்தனர். இவர், சென்னைப் பச்சையப்பன்
உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று, தமது பதினெட்டாம் வயதில் பள்ளி இறுதித்
தேர்வில் முதல்வராகத் தேறினார். பின், சென்னை, அரசினர் கல்லூரியிற் சேர்ந்து
பயின்று இரு கல்லூரித் தேர்வுகளிலும் முதல்வராகவே தேறினார்.
கல்லூரியின் இறுதித் தேர்வின் முடிவு வெளி வருதற்கு முன்னேயே,
இவர் அச் சென்னை அரசினர் கல்லூரியிலேயே உதவி கணக்காசிரியராக அமர்த்தப்பட்டனர்.
இவர் கும்பகோணம் கல்லூரியில் கணக்காசிரியராய் அமர்ந்திருந்தபோது
எம்.ஏ. தேர்வுக்குப் படித்து அதிலும் சிறப்புறத் தேர்வுற்றுப் பட்டம் பெற்றார்.
பின் இவர் சென்னை அரசினர் கல்லூரிக்குக் கணிதப் பேராசிரியராய் மாற்றப்பட்டனர்.
|