பக்கம் எண் :

26

Kachchik Kalambagam


(5) கவுணியருக்கு - கவுண்டிணீய குடிமரபிற் பிறந்த ஞானசம்பந்தருக்கு, அணிமுத்தம் - அழகிய முத்துப் பந்தலும், முத்துப் பல்லக்கும், காதலின் - விருப்பத்தோடு, ஈந்தருள் செயல் - கொடுத்தருளிய செய்கை, அக்கவுணியருக்கு - அத்திருஞானசம்பந்தரது தாடையில், அணிமுத்தம் - அழகிய முத்தம், கனிந்து இட்ட - அன்பு கொண்டு கொடுத்த, பரிசன்றோ - கருணையன்றோ.

சிவபிரான் சம்பந்தருக்கு வாய் முத்தங் கொடுத்த பரிசினால் அல்லவோ முத்துப் பந்தலும் முத்துப் பல்லக்கும் அருளினாரென்க. முத்தம் என்பது கருவி ஆகுபெயராய் முத்துப் பந்தலையும், முத்துப் பல்லக்கையும் உணர்த்திற்று

(6) மதி - பிறைச்சந்திரன், வேணிமிசை - சடையினிடத்து, மேவ - பொருந்த, மலர்விழியும் - மலர்ந்த கண்ணும், மதியான. அச்சந்திரன் ஆன, விதிசாற்ற - முறைமையை (உண்மையை) எடுத்துச் சொல்ல, அறியேம் - அறியேங்களாகிய யாம், உன் மேனி அழகு - தேவரீருடைய திருமேனி யழகை, இயம்புவதே - இத்தகையது என்று சொல்ல முடியுமோ. ஏகாரம் வினாவோடு எதிர்மறை.

மதி ஒன்றே சடையிலும் முகத்திலும் இரண்டாகப் பொருந்தி யிருத்தலின் முறைமையை அறியமாட்டாத யாம், உன் திருமேனி முற்றும் உள்ள எல்லா உறுப்புக்களின் அழகையும் பாராட்டி எங்ஙனம் சொல்லமாட்டுவேம் என்பதாம். (சந்திரன் தலையில் இருப்பதும், கண்ணாக இருப்பதும் ஆகிய உண்மையை அறியமாட்டாதேம் உன் மேனி முழுவதும் ஆன அழகைச் சொல்ல முடியுமோ முடியாது).

(7) முலைக்குறியும் - உமாதேவியினது முலைத்தழும்பும் வளைக்குறியும் - வளைத்தழும்பும், கொண்டதன்பின் - அடைந்ததற்பின், முதல்வனே - முன்னவனே, குறியும் குணமும் - பெயரும் குணமும், இலையெனல் - உனக்கு இல்லை என்று சொல்லுதல், எவ்வண்ணம் - எவ்விதமாக, இயைந்திடுமே - பொருந்திடும்? (பொருந்தாது) ஏகாரம் எதிர்மறை.

கம்பையாறு பெருக்கெடுத்து வருவதைக் கண்ட காமக் கண்ணியார் அஞ்சித் தாம் வழிபாடாற்றும் மணல் இலிங்கத்தைத் தழுவிக்கொண்டபோது, அம்மையாரது கொங்கைகளும் வளையல்களும் இலிங்கத்தின்மீது (குறிகள்) அடையாளங்கள் செய்தன. உண்மை இங்ஙனமாகக் குறியும் (மனக்கோளுக்கு அடங்குதலும்) ‘சுட்டப்பட்ட’ குணமும் உனக்கு இலை (இல்லை) எனல் எவ்வாறு பொருந்தும்?

இலை என்பது இல்லையென்பதன் இடைக் குறை. இலை என்ற குறிப்புமுற்றின்முன் எதுகை நோக்கி வலிமிகல் செய்யுள் விகாரமாம்.

“துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள் தோய்சுவடு
பொடிகொள்வான் தழலில் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே”

என்பது திருவாசகம்.

(8) மாவடிக்கீழ் - மாமரத்தின் அடிமரத்தின் கீழ், உற்றாய் - எழுந்தருளினவனே, பழமறை - பழமறையான வேதங்களாலே, சொல் - புகழ்ந்து சொல்லப்பட்ட, பரமேட்டி - பரம்பொருளே (சிவனே) உன் மலரடிக்கு - உன் மலர்போன்ற திருவடிக்கு, மங்கலச் சொற்பா - மங்கலச் சொற்களாலாகிய பாட்டை, அடுக்க - வளமாக அடுக்க, நா அளிப்பாய் - நாவில் நின்று அருள்புரிவாய்.

சொற்பா - சொற்களாலாகிய பாட்டு, நா - நாவளமுமாம். பரமேட்டி - பரம்பொருள் (சிவன்)

மாவடிக்கீழ் உற்றாய்! சொல் பரமேட்டி! உன் மலர்போன்ற அடிக்கும் பாக்கள் பொருந்த நாவில் நின்று அளிப்பாய் என இயைக்க; நாவளத்தை அளிப்பாய் என்றுமாம். உன் மலரடிக்கே என்புழி ஏகாரம் பிரிநிலை:

தேற்றமுமாம், நா, சொல் (கருவியாகு பெயர்)
மலரடி - உவமத்தொகை நிலைத்தொடர்.
மலரடி - எங்கும் மலர்ந்த அடிஎனலுமாம்.
இப்பொருளில் வினைத்தொகையாம்.

வேதங்கள் உன்னால் பாடப்பெற்றன. அவைகளே உன்னைப் புகழ்ந்து கூறவல்லன. எனவே உன் மலரடிக்குரிய மங்கலப்பாக்களை என்னால் கூறல் இயலாது; நீயே என் நாவில் நின்று உன்புகழை இசைக்கவேண்டும். எனவே என் நாவில் நின்று அருள்புரிவாய் என்றார்.


Untitled Document