கலிநிலைத்துறை
ஏனங்
கொன்றார்; ஏனக் குருளைகள் இடர்தீர்த்தார்,
மானங்
கொன்றை வலன்வைத் துமைமா னிடம்வைத்தார்,
தானங்
குறைவார் தானத் துறையார், தமிழ்வல்லார்
கானத்
துறவார் கம்பத் திடையே மகிழ்வாரே. (11)
|
(இ-ள்)
ஏனங் கொன்றார் - (அருச்சுனன் பொருட்டுப்) பன்றியைக் கொன்றார், ஏனக் குருளைகள்
- அப் பன்றிக்குட்டிகளினுடைய, இடர் தீர்த்தார் - பசித் துன்பத்தைத் தாம் பன்றியாக
உருக்கொண்டு அவைகளுக்கு முலைப்பால் கொடுத்துத் தீர்த்தார். மான் அங்கு ஒன்றை -
தாருகாவனத்து முனிவர் ஏவ, அங்கு வந்த மான் ஒன்றை, வலன்வைத்து - தம் வலக் கையிலே
தாங்கி, உமைமான் - உமாதேவியாகிய மானினை, இடம் வைத்தார் - இடப் பாகத்தே வைத்தார்,
தானம் குறைவார் தானத்து - தானம் குறைவோரிடத்து, உறையார் - தங்கமாட்டார், தமிழ்
வல்லார் - தமிழில் வல்லவராகிய மூவருடைய, கானத்து - இசைப்பாட்டாகிய தேவாரங்களின்கண்,
உறவார் - உறவு கொள்வார். (இவையெல்லாம் செய்த அவர் யாரெனில்), கம்பத்திடையே
மகிழ்வாரே - திரு ஏகம்பத்திடத்து மகிழ்வாராகிய திரு ஏகாம்பரநாதர் ஆவார். தானம்
- தரும வழியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல். (திருக்குறள்:9.பரி.)
தானம் - இடம். தமிழ் வல்லார் கானத்து உறவார்-மூவர் தேவாரமாகிய இசைப் பாட்டில்
உறவு கொள்வார்.
இனித் தமிழ்க்கானத்து வல்லார் உறவார் என மாற்றிக்
கூட்டித் தமிழிசைப் பாட்டில் வல்ல வர்களான தேவார திருவாசக முதலிய பாடிய நாயன்மார்களோடு
உறவு கொள்வார் என்று கூறலுமாம். கம்பத்திடை - திரு ஏகம்பத்திடத்து. தமிழ் வல்லார்
எனவும் கானத்து உறவார் எனவும் பிரித்துத் தமிழ் வல்லார் - அடியர் பொருட்டுப் பாசுரங்கள்
எழுதிக்கொடுத்தவர் என்றும், கானத்து உறவார் - காட்டினிடத்து உறவுகொண்டு வாழ்பவர்என்றும்
கூறலுமாம்.
கானத்து உறவார் - சுடலையாடி.
கம்பத்திடை - திரு ஏகம்பத்திடை: ஆவது எந்தை மாமரத் தடியில் என்பது.
|