பக்கம் எண் :

52

Kachchik Kalambagam


இரங்கல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

மாமையை அடைந்தாய் வானக முற்றாய்
      மழைக்கணீர் உகுத்திடப் பெற்றாய்
காமுற வணஞ்சேர் வில்வளை விட்டாய்
      கலைமதி ஒளித்தலைப் பெட்டாய்
நாமுற விடிக்க மின்னிடை யானாய்
      நள்ளிருள் அம்பரம் போனாய்
ஏமுறு மென்போற் கொண்டலே கச்சி
      ஈசனை விழைந்தனை சிறப்பே.                      (20)

மேகம்

(1) (இ-ள்) மாமையை அடைந்தாய் - கருநிறத்தை அடைந்தாய்.

தலைவி

மாமைநிறத்தை (பசலை) அடைந்தேன்.

மேகம்

(2) வான் அகம் உற்றாய் - ஆகாயத்தில் பரவினாய்

தலைவி

சிறந்த வீட்டில் ஓரிடத்தில் வருத்தத்துடன் இருக்கின்றேன்.

மேகம்

(3) மழைக் கண் நீர் உகுத்திடப் பெற்றாய் - நின்னிடமிருந்து
    மழை நீரைப் பொழிந்திடப் பெற்றாய்.

தலைவி

கண்ணீர் மழைபோலே சொரிந்திடப் பெற்றேன்.

மேகம்

(4) காமுற வண்ணஞ் சேர் விரும்பத்தக்க பல வண்ணங்களோடு கூடிய,
    வில் வளை விட்டாய் - இந்திரவில்லை வளைவாக வெளிப் படுத்தினாய்.

தலைவி

விரும்பத்தக்க அழகுவாய்ந்த ஒளியையுடைய வளையல்களை நீக்கினேன்      (கையினின்றும் தளர விட்டேன்)

மேகம்

(5) கலைமதி ஒளித்தலைப் பெட்டாய் - மேகமாகிய நீ திரிதலின் நிறை நிலா          மறைந்துபோதலை விரும்புகின்றாய்.

தலைவி

(1) நூலறிவு குறைதலைப் பெற்றேன். (2) நானும் நிறை நிலா மறைந்து விடுவதை     விரும்புகின்றேன்.

மேகம்

(6) நா முற இடிக்க - உலகத்தார் அஞ்சும்படி இடி உண்டாக.

தலைவி

நாம் உறவு இடிக்க - நாம் அச்சமடைய, உறவு - பெற்றோர் முதலிய உறவினர்.     இடிக்க - இடித்துப் பேச.

மேகம்

(7) மின்னிடையானாய் - நின்னிடத்து மின்னலைக் கொண்டிருக்கின்றாய்.

தலைவி

மின்னல் போன்ற இடை மெலிந்து விட்டேன்.

மேகம்

(8) நள்ளிருள் அம்பரம் போனாய் - நடு இரவில் நீ நீரைக்குடித்தற்காகக் கடலில்     செல்கின்றாய் (நீரைக்குடித்தற்கு மிக்க இருளையுடைய கடலிற்குச் சென்றாய்)

தலைவி

நான் இருளில் ஆடை நீங்கப் பெற்றிருக்கின்றேன்.

மேகம்

(9) கொண்டலே - மேகமே, ஏமுறு - கலக்கமுற்ற, என்போல் - என்னைப்போல,    கச்சி ஈசனை - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதனை, விழைந்தனை - நீ    விரும்பினாய், சிறப்பே - (மிக்க) சிறப்புடையது! (குறிப்பு நிலை)

நான் விரும்பினேன்; எனக்கு அவர் ஒன்றும் செய்திலார். நீயும் விரும்பினையே;

என்போல் துன்புறுவதற்காகவா?

வணம் என்பது வண்ணம் என்பதனுடைய இடைக்குறை.

  “பே நா முருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றதால்    நாம் அச்சம் எனப் பொருளாதல் காண்க.