பாட்டால்
பழையவினை துடைத்தல்
அறுசீர்
ஆசிரிய விருத்தம்
நாடுந் தொண்டர் மகிழ்வெய்த
நறுமா நீழ லமர்ந்தானைப்
பாடும்
பணியே பணியாகப்
படைத்தேன் பழைய வினை துடைத்தேன்
ஓடுந் துடியுங்
கரத்தமைத் தோன்
ஓங்கா ரத்தின் உட்பொருளைத்
தேடுந்
திறத்தோர்க் கறிவித்தோன்
தேவி உமையாள் காதலனே. (27)
(இ-ள்.)
நாடுந் தொண்டர் - தன்னை அடைய விரும்பும் அடியவர்கள், மகிழ்வு எய்த - மகிழ்ச்சியடைய, நறு மா நீழல் அமர்ந்தானை - நறுமணங் கமழ்கின்ற பூக்களையுடைய
மாமரத்தின் நிழலில் எழுந்தருளினான்; அவனை, பாடும் பணியே - பாடுகின்ற தொண்டினையே, பணியாகப் படைத்தேன் - தொண்டாகப் பெற்றேன்; (அதனால்)
பழைய வினை துடைத்தேன் - தொடக்கமில்லாத தீவினையை ஒழித்தேன்.
ஓடும் துடியும் - நான் முகனது மண்டையோட்டையும், உடுக்கையையும், கரத்து அமைத்தோன் - கையிற் கொண்டவனும்,
ஓங்காரத்தின் - பிரணவத்தின், உட்பொருளை - உள்ளப் பொருளை, தேடும் திறத்தோர்க்கு - ஆராய்கின்ற அடியார்கட்கு, அறிவித்தோன் - அறிவித்தவனும்,
தேவி உமையாள் காதலனே - உமாதேவியின் நாயகனும் ஆய அவனே. அமைத்தோனும், அறிவித்தோனும், காதலனும் ஆகிய நீழலமர்ந்தானைப் பாடும் பணியே படைத்தேன். ஆதலால்,
பழைய வினை துடைத்தேன் எனக் கூட்டுக.
(வி.உ.)
‘ஓடும் துடியும் கரத்தமைத்தோன்’ என்றதால் பெருந் தேவனாகிய நான்முகனினும் பெருந்தேவன் இறைவன் என்பதும், அப்பிரமன் உலகைப்படைக்கும் பெருந்தேவனாயது, அவ்விறைவன்
தன் கரத்தேந்தும் துடியிடத்தெழுப்பிய இனிய ஒலியால் உலகங்களைப் படைத்த பின் அப்படைப்புத் தொழிலை அப்பிரமனுக்குக் கருணையுடன் அளித்த நாள் தொடங்கி
என்பதும் அறியலாம். அத்துடியிடத்து எழுந்த நாதவெழுத்துக்களுள் ஓங்காரவடிவம் அவ்விறைவனுடைய வடிவம் என்பதும் அவ்வெழுத்தினுட்பொருளை அவன் உணர்த்தினனன்றிப்
பிறர் உணர்த்த உணர முடியாதாதலால் அவ்விறைவனை அன்பு கொண்டு பூசித்துத் தேடுவோர்க்கு அவனே உணர்த்தியருளுவான் என்பதும் ‘ஓங்காரத்தி னுட்பொருளைத் தேடுந் திறத்தோர்க்குக்
கூறுவித்தோன்’ என்றதால் பெறக்கிடக்கின்றன.
அன்புடைய பச்சை மயிலுக்கு எளிவந்த காதலனானான் என்பது தேவி உமையாள் காதலன் என்றதால் அறிவிக்கப்பட்டது.
பெருந்தலைமையோ, உண்மைப் பொருளை உணரும் ஆற்றலோ, உளங்கசிந்துருகும் ‘காதலோ இல்லாது’ ‘எம் கடன் பணிசெய்து
கிடப்பதே’ எனத் தொண்டு பூண்டொழுகும் தொண்டர்கள் மகிழ்ச்சியடையக் கச்சியில் நறுமா நீழலில் கோயில் கொண்டு எழுந்தருளினான் என்பதும், அத்தொண்டினுள்
பாடுந்தொண்டே சிறப்புடைய தென்பதும், ஆதலால் அப்பாடுந் தொண்டினையே கலம்பக ஆசிரியர் மேற்கொண்டார் என்பதும் அங்ஙனம் தாம் மேற்கொண்டதனால் இல்லாமல்
வந்த ஆணவ முதலிய மலங்களை வேரோடு ஒழித்தார் என்பதும், ஏனையவரும் அங்ஙனம் ஒழிக்க அவர் தாம் பாடும் ஆற்றல் பெறாராயினும் தாம் பாடிய கலம்பகத்தைப்
பாடித் தம் வினைகளைத் துடைக்கவேண்டி நிற்கிறார் என்பதும் முன்னிரண்டு அடிகளால் அறியலாம். |