களி
கட்டளைக்
கலிப்பா
மாவின் நீழல் வதிந்தருள் வார்கச்சி
வாழும் இன்ப மருவு களியரே
தேவர்
அன்று; சிதைந்தவ ரே; மது
வாவி சீதரன் உண்ண மயங்குறின்
நாவ லர்ந்துமெய்
பேசுவர; இன்னறை
யுண்ட நன்மையர்; நற்பனை தெங்குசேர்
காவி டைப்பாடி
ஆடுவர் மண்டரு
கண்ணி றைந்த அமுதை அருந்தவே. (30)
(இ-ள்.)
மாவின் நீழல் - மாமரத்தின் நிழலில், வதிந்தருள்வார் - எளி வந்து வீற்றிருந்து
யாவருக்கும் அருளுபவராகிய சிவபெருமானாரது, கச்சி - திருக்காஞ்சியில், வாழும் - வாழ்ந்துவரும்,
இன்பம் மருவும் - (மண்ணுலகம் தரும் கள்ளாகிய நிறைந்த அமுதை அருந்துதலால்) இன்பம்
பொருந்திய, களியரேம் - களிப்புடையேம், யாங்கள் - நாங்கள் (அருந்திய கள்ளின்
சிறப்பைக் கூறுவோம் கேட்பீராக) அன்று - தக்கன் வேள்வி செய்த அக்காலத்தில்,
தேவர் - (அவன் தரும் மது வுண்ணும்படி சென்ற) தேவர்கள், சிதைந்தவரே - (வீரபத்திரக்
கடவுளால்) அழிந்தனரேயாக, மது - (அவன் தந்த) மதுவினை, வாவி சீதரன் உண்ண - திருப்பாற்கடலில்
பள்ளிகொள்ளும் திருமகள் கணவனாகிய திருமால் உண்டலால், மயங்குறின் - மயக்கத்தையே
உற்றான் எனினும், மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்த - மண்ணுலகம் தருகின்ற (யாங்கள்
உண்ணும்) கள்ளாகிய நிறைந்த அமுதினை உண்டால், (உண்டவர்), நா அலர்ந்து - நாக்குழறுதல்
இன்றிச் செவ்வையாக, மெய் பேசுவர் - உண்மையே பேசும் இயல்பினரா யிருப்பர், இன்நறை
உண்ட நன்மையர் - அத்தகைய இனிய கள்ளினை உண்ட நன்மையையுடையார், நல் பனை தெங்கு
சேர் காஇடை - சிறந்த பனை, தென்னை வளர்ந்துள்ள சோலையில், பாடி ஆடுவர் - இன்பமாகப்பாடி
ஆடிக் காலங்கழிப்பர். (ஆதலால் இத்தகைய கள்ளினை நீங்கள் உண்டு யாம் பெற்ற இன்பத்தைப்
பெறுவீராக.)
கச்சியில் சிவபெருமான் வீற்றிருக்க, அச்சிவபெருமான்
அருளமுதைப் பருகியவர்கள் களிப்புற்று, அக்களிப்புத் தமக்கு வந்தது சிவபெருமானாகிய
கள்ளினை உண்டபடியால் என்று கூறுமுகத்தானே, அக கள், தன்னை உண்டாரை அழிவிக்காமலும்,
மயக்கமுறுவிக்காமலும் நிலைபெறச் செய்து, மெய்யே பேசுவித்து, அவ்விறைவன் புகழையே
பாடியாடும்படிச் செய்யும் என்னும் பொருள் புலப்படுத்தல் இப்பாட்டில் அமைந்திருத்தல்
காண்க. தக்க யாகத்தில் சிவபெருமான் இல்லாத குறையால் தேவரெல்லாரும் அழியவும்,
திருமாலும் மயக்க மெய்தவும், கச்சியில் சிவபெருமான் இருக்கும் நிறைவால் யாவரும்
நிலைகுலையாமையும், மெய்யே பேசுதலும், பாடியாடுதலும் ஆகிய சிறப்புப் பெறுவர் என்றதால்
சிவபெருமானது தலைமைச் சிறப்பு விளங்குவதைக் காணலாம்.
“தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந்
தவர் தம்மைத் தொலைத்ததுதா னென்னேடி” (திருவாசகம் திருச்சாழல்) என்பதால் தேவர்களைத்
தக்க யாகத்தில் அழித்தமை காணலாம்.
‘ஆவா திருமா லவிபட கங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் றாதையென் றுந்தீபற’ |
என்பதால் திருமால் சாவாமல் மயக்கமட்டும் அடைந்தான் என்பதை
உணர்க.
மண்தரு கண்நிறைந்த அமுதை யருந்தவே: மண்ணுலகத்தே கச்சியம்பதியில்
மாமரத்தின் கீழே கண்ணுக்கு நிறைவைத் தரும் சிவபெருமானாகிய அமுதினை அருந்த என்ற
பொருள் கொண்டு சிவபெருமான் கள்ளாக உருவகம் செய்யப் பெற்றிருத்தலை யறிக.
|