அறுசீர் ஆசிரிய விருத்தம்
மழுவேந்து வலக்கரத்தர், மழை யேந்து
சடைச்சிரத்தர், வான்பு ரத்தர்,
விழவாங்கு
பூதரத்தர், வேளெரித்த
மாவுரத்தர், ஆத ரத்தர்,
தொழவாழு
மாதிரத்தர், நடமாடும்
எரிசுரத்தர், தூவ ரத்தர்,
குழையாடு
செவியரத்தர் கச்சியெனு
மாகரத்தர் குணக்குன் றாரே. (33) |
(இ-ள்.)
மழு ஏந்து - மழுப்படையை (எரியிருப்புப் படையை)த் தாங்கிய, வலம் கரத்தர் - வலக்கையை
உடையவர், (வல்லமை பொருந்திய கையை உடையவருமாம்) மழை ஏந்து சடை சிரத்தர் - மேகம்
தங்கிய சடையோடுகூடிய தலையை உடையவர் (கங்கையைத் தாங்கும் சடையோடுகூடிய தலையையுடையவருமாம்),
வான் புரத்தர் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவர் (சிதாகாச இடத்தர்), விழவாங்கு
பூதரத்தர் - தனக்கு அடங்க வளைத்த மேருமலையை உடையார், வேள் எரித்த - மன்மதனை
எரித்த, மா உரத்தர் - சிறந்த மன வலிமையை யுடையவர், ஆதரத்தர் - (எல்லா உயிர்களுக்கும்)
ஆதாரமாகக் கருணை பொருந்தி இருப்பவர், (எல்லா உயிர்களிடமும் அன்புடையவர்) தொழ
வாழும் - (எல்லா ஆன்மாக்களும்) தொழும்படி வாழும், மாதிரத்தர் - (கயிலாய மலையை
உடையவர், நடமாடும் எரிசுரத்தர் - கூத்தாடும் அனலை வீசுகின்ற காட்டை உடையவர், தூ
வரத்தர் - தூய்மை உள்ள வரத்தை அளிப்பவர், குழையாடு செவியர் அத்தர் - குழைகள்
அசைகின்ற செவியை உடையவராகிய தலைவர், கச்சியெனும் ஆகரத்தர் - காஞ்சி என்னும்
உறைவிடத்தை உடையார். (அவர் யாரெனில்), குணக்குன்றாரே - எண் குணங்களாகிய மலையாரான
ஏகாம்பரநாதரே.
வான்புரத்தர் - தேவர்களைப் பாதுகாப்பவர் எனினுமாம்.
வான் ஆகுபெயர்.
பூதரத்தர் என்புழி, பூதரம், மலை. விழவாங்கு என்ற
குறிப்பால் மேருமலையை உணர்த்திற்று.
ஆதரத்தர், ஊர் தோறும் இருப்பவர் எனினும் அமையும்.
(ஆதரம் - ஊர்)
மாதிரத்தர் - திக்குகளை உடையவர் எனினுமாம்.
எரிசுரம் - பேரூழிக் காலத்தில் நெருப்பு நெருங்கிப்
பிறங்க எரிகின்ற காடு.
தூவரம் - தூய்மை வரும்.
அத்தர் - அர்த்த பாகத்தை உடையவர்.
அத்தம் - சிவப்பு; செந்நிறத்தை உடையவர்.
அத்தர் - தலைவர்; அடைக்கலம் அளிக்கும் கையை உடையவர்.
குணக்குன்று - உருவகமாம். எண்குணமாவன: தன் வயத்தனாதல்,
தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல் முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்,
பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன. |