பக்கம் எண் :

69

Kachchik Kalambagam


நேரிசை வெண்பா


சோதிப் பரம்பொருள்வாழ் தூயவிடந் தொண்டர்நெஞ்சோ
வேதத் தனிமுடியோ வேள்விபுரி - மாதவர்வாழ்
தில்லையோ கூடலோ சீர்க்கயிலை மாமலையோ
தொல்லையே கம்பமோ சொல்.                          (37)


(இ-ள்.) சோதிப் பரம்பொருள் - ஒளிப் பிழம்பாயுள்ள மேலான சிறந்த பொருளே, வாழ் தூய இடம் - நீ வாழ்கின்ற பரிசுத்தமான இடமும், தொண்டர் நெஞ்சோ - அடியார் மனமோ, வேதத் தனிமுடியோ - வேதத்தினது ஒப்பில்லாத உச்சியோ, வேள்விபுரி மாதவர்வாழ் தில்லையோ - (நாள்தோறும்) வேள்வியைச் செய்கின்ற மிக்க தவத்தையுடைய முனிவர்கள் வாழ்கின்ற தில்லைவனமாகிய சிதம்பரமோ, கூடலோ - நான்மாடக்கூடலாகிய மதுரையோ, சீர் கயிலை மாமலையோ - சிறப்பு வாய்ந்த கயிலை மாமலையோ, தொல்லை ஏகம்பமோ - பழைமையான கச்சிப்பதியோ, சொல் - நீ சொல்.

தில்லை - தில்லை மரங்கள் மிக்குள்ள இடம் (சிதம்பரம்). கூடல் - சிவபெருமானுடைய சடையில் உள்ள நான்கு மேகங்களும், இந்திரன் ஏவிய மழையைத் தடுக்க நான்கு மாடங்களாக விரிந்த இடமாகிய மதுரை.  தொல்லை ஏகம்பம் - பழைமையையுடைய ஒற்றை மாமரத்தினை உடைய கச்சிப் பதி.  ஏக+ஆம்ரம் - ஏகாம்ரம் என்பது ஏகம்பம் என்று மருவிற்றாதலால் ஏகம்பம் என்பது ஒற்றை மாமரத்தையே குறிப்பது.  ஈண்டு அவ் வொற்றை மாமரத்தடியை இறைவன் எழுந்தருளுதற்கு இடமாக உடைய கச்சிப்பதியைக் குறித்துநின்றது.  ‘தொல்லை ஏகம்பமோ’ என்று கூறிய குறிப்பால், நெஞ்சும், முடியும், தில்லையும், கூடலும், கயிலைமலையும் இறைவன் வாழ்தற்கு உரிய இடமாம் எனினும், அவன் வாழ்தற்குரிய பழைமையான இடம் கச்சிப்பதி என்று கச்சிப் பெருமையை ஆசிரியர் வெளிப்படுமாறு செய்துள்ளார்.