திருச்சிற்றம்பலம்
கச்சிக்கலம்பக
உரையாசிரியர்
மோசூர்
கந்தசாமி முதலியார், B.A., M.R.A.S.
அவர்கள்
* வரலாற்றுச்
சுருக்கம்
------
பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியார் B.A.,
அவர்கள், சென்னையில் அரிசி வாணிகஞ் செய்திருந்த மோசூர் பொன்னம்பல முதலியார் முதல் மனைவி உண்ணாமுலை அம்மைக்கு
முதல் திருமகனாக 9-1-1887-ல் தோன்றினார். கமல விநாயகன், தியாகசுந்தரம் என இரு ஆண் மக்களும், வள்ளி அம்மை என ஒரு
பெண் மகவும் இவருக்குப் பின் தோன்றினார்கள்.
கந்தசாமி முதலியார் இளமையில், சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் கலாசாலையில் கல்வி பயின்று, கலாசாலைக்
கல்வியை முடித்தார். பின் பச்சையப்பர் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். 20-5-1908-ல் இவருக்கு முதல் திருமணம்
நடைபெற்றது. அரிகலவாடி திரு.முனிசாமி முதலியார் திருமகள் கனகவல்லி அம்மை இவரது முதல் இல்லறத் துணைவியானார். இவ் வம்மையார்
இரண்டாண்டுகளில் இறைவன் திருவடிப்பேறு எய்தினர். இவ் வம்மையாருக்கு மக்கட்பேறு ஒன்றுமின்று.
இவர் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஒரு பகுதியை முடித்து, 1912-ல் சென்னை அரசாங்கக் கணக்கிலாகா தலைவர்
அலுவலகத்தில் (Accounts
General Office)
எழுத்தாளராக அமர்ந்தனர். 22-8-1913-ல் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அரிகலவாடி திரு. இரத்தின முதலியார்
திருமகள் அமிர்தம் அம்மை இவரது இரண்டாம் இல்லறத் துணைவியாக அமைந்தனர். இவர் அலுவலில் இருந்துகொண்டே
1914-ல் பி.ஏ. தேர்தலுக்குச் சென்று தத்துவத்துறையில் (Philosophy)
பி.ஏ. பட்டம் பெற்றார்.
இளமைப்பருவ முதற்கொண்டே இவரது குடும்ப நட்பினராக இருந்த மறைத்திரு. சித்தாந்த சரபம் அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார்
அவர்களிடம் நெருங்கிப் பழகும் நற்பேறு இவர் வாய்ப்பப்பெற் றிருந்தமையின், இவரது கலாசாலைக் கல்வியை முடித்த நாள்முதல்
அப் பெரியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சைவசமய நூற்களும் பாடங் கேட்டு வரும் புண்ணியப்பேறு உடையராயினர். கல்லூரியில்
இவரது தமிழாசிரியராக விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் எம்.ஏ. அவர்கள் தொடர்பும்
இவரது தமிழார்வத்தினைப் பெருகச் செய்தது.
இங்ஙனம் செந்தமிழ் மொழியின் செழுஞ்சுவை இன்பம் துய்த்துக் களித்த இவர், அவ்வின்பப் பெருக்கிலே என்றும் எப்பொழுதும்
தோய்ந்தினிக்க வேண்டுமெனவும், அவ்வின்பப் பெருக்கின் உண்மையினை உலகிற் பலரும் உணர்ந்தினிக்குமாறு பணியாற்ற வேண்டுமெனவும்
எழுந்த பெருவிருப்பால், தமது கணக்கிலாகா அலுவலை விட்டுத் தாம் கற்ற பச்சையப்பர் கல்லூரியிலேயே 1918-ல், தமிழாசிரியராக ஆனார்.
இவர் கல்லூரித் தமிழாசிரியராக இருந்தபோதும், பேராசிரியர் தி. த. கனக சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சிந்தாமணி, சிலப்பதிகாரம்
மணிமேகலை முதலிய நூற்களைப் பாடம் கேட்டுத் தம் தமிழறிவினை வளம்படுத்திக்கொண்டே யிருந்தனர். பின்னர், இராமலிங்கத்
தம்பிரான் அவர்களிடம் காஞ்சிப்புராணம், தணிகைபுராணம் முதலிய நூற்களைப் பாடங்கேட்டு வந்தனர்.
இவர் வடலூர் இராமலிங்க அடிகளாரிடத்தில் தனித்த பேரன்புடையராக யிருந்தனர். இது காரணமாகவே இவரது முதற் றிருமகளுக்கு அருட்
பிரகாசம் எனவும், மூத்த திருமகனுக்கு இராமலிங்கம் எனவும் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. 1924-ல் இவரது பார்வையில்
திருவருட்பாப் பதிப்பொன்று வெளிவந்துள்ளது.
இவர் 1925-ல் சென்னைப் பெத்துநாய்க்கன்பேட்டை அருணாசலேச்சுரர் கோயில் அறச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு,
கோயில் வீடுகள் பலவற்றைப் புதுக்கி அமைத்து வருவாயைப் பெருக்கியதுடன், கோயிலில் பல சீர்திருத்தங்கள் புரிந்து, 1929-ல்
அப்பணியைத் தானே விட்டிட்டனர்.
1922 முதல் பல ஆண்டுகள் அவ்வப்போது இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குமுறை உரைப்போர் (Juries)
ஆக இருந்திருக்கின்றனர்.
1931 முதல் 1935 வரை இவர், சென்னை அரசாங்கக் கலாசாலைப் பாடப் புத்தகம் (S.S.L.C.
Text Book)
வகுப்போராக இருந்திருக்கின்றனர்.
1935, 1939, 1940 இவ்வாண்டுகளில் இவர், சென்னை அரசாங்க எழுத்தாளர் தேர்தல் (Service
Commision Examination)
சோதனையாளராக இருந்திருக்கின்றனர்.
இவர் பல்கலைக் கழகத்துச் சோதனையாளர் குழுவின் உறுப்பினராயும் (Member
of the Board of Examiners),
அதன் தலைவராயும் (Chairman
of the Board of Examiners)
இருந்திருக்கின்றனர்.
இவர் பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்து உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து உறுப்பினராகவும், ஆந்திரப்
பல்கலைக் கழகத்து உறுப்பினராகவும், அவற்றின் உட்கழகங்களின் உறுப்பினராகவும் இருந்திருக்கின்றனர்.
1921 முதல் 1945 வரை இவர் பச்சையப்பர் கல்லூரிக் கழகத்து (College
Council)
உறுப்பினராக இருந்திருக்கின்றனர்.
1918 முதல் சென்னைப் பச்சையப்பர் கல்லூரித் தமிழாசிரியராகவும், அக் கல்லூரித் திராவிடக் கலைப் பயிற்சிகளின்
மேற்பார்வையாளராகவும் பணியாற்றிவந்த இவர் 1-7-1945-ல் இவற்றினின்று ஓய்வு பெற்றுக்கொண்டனர்.
|