பக்கம் எண் :

82

Kachchik Kalambagam


ஊசல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்


தேவார முதலியவைந் துறுப்பும் வாழச்
            சிறந்தமறை ஆகமங்கள் செழித்து வாழத்
      தாவாத சித்தாந்த சைவம் வாழச்
            சந்தவரைச் செந்தமிழ்நூல் தழைத்து வாழ
      நாவாரும் புகழ்க்கச்சி நகரிற் காம
            நயனியொடு முறையிறைசீர் நன்கு பாடிப்
      பூவாரு மலர்விழியீர்! ஆடீர் ஊசல்
            புத்தமுத நிகர்மொழியீர்! ஆடீர் ஊசல்.           (49)


(இ-ள்.) தேவாரம் முதலிய - தேவாரம் முதலிய, ஐந்து உறுப்பும் வாழ - ஐந்து அங்கங்களும் வாழவும், சிறந்த மறை ஆகமங்கள் - சிறந்த நான்கு வேதங்களும் இருபத்தெட்டு ஆகமங்களும், செழித்து வாழ - செழிப்புற்று வாழவும், தாவாத - புறச்சமய வழக்குகளால் கெடுதல் இல்லாத, சித்தாந்த சைவம் வாழ - சித்தாந்தம் என்னும் பெருநெறியால் தழுவப்பெற்ற சைவசமயம் வாழவும், சந்த வரைச் செந்தமிழ் நூல் - சந்தன மரங்கள் நிறைந்த பொதிய மலையில் அகத்தியரால் வளர்க்கப்பட்ட செந்தமிழ்  மொழி, தழைத்து வாழ - செழிப்படைந்து வாழவும், நா ஆரும் - புலவர் நாக்களில் பொருந்திய, புகழ் - புகழையுடைய, கச்சி நகரில் - கச்சி நகரில் எழுந்தருளிய, காம நயனியொடு - காமாட்சியாரோடு, முறை இறை - முறையாக எழுந்தருளிய ஏகாம்பரநாதரது, சீர் நன்கு பாடி - சிறப்பை நன்றாகப் பாடி, பூ ஆரும் மலர் விழியீர் - அழகுபொருந்திய தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவரே, ஆடீர் ஊசல் - ஊசலாடுவீர், புத்தமுதம் நிகர் - புதிய அமிர்தத்தை ஒத்த, மொழியீர் - சொற்களை உடையவர்களே, ஆடீர் ஊசல் - ஊசலாடுவீர்.

புதுமை அமுதம் - புத்தமுதம்.

தேவாரம் முதலிய ஐந்துறுப்பும் வாழ என்றது, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் என்னும் ஐந்துறுப்புக்களும் வாழ என்றவாறு.

சைவர், தாம் நாடோறும் செய்யும் பூசைக்காலத்துப் பன்னிரண்டு திருமுறைகளுள் இவ்வைந்துறுப்புக்களை மனப்பாடம் செய்வாராதல்பற்றி ‘ஐந்துறுப்பும் வாழ’ என்றார்.

      ‘ஆடுவீர்’ என்பது, ‘ஆடீர்’ என மருவிநின்றது.