பக்கம் எண் :

98

Kachchik Kalambagam

 

(மடக்கு) தலைவி யிரங்கல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

      கற்றரு மாதின் பங்குடையார்
            கச்சியர் எனதின் பங்குடையார்
      சிற்றளை யுள்ளுறை வாயலவா!
            தென்வளி காதுறை வாயலவா?
      சுற்றுமு டைந்து வருந்திடரே!
            தோற்றுமி டைந்து வருந்திடரே
      பெற்றிடு முத்தம ருங்கழையே!
            பேசரி யாரைம ருங்கழையே.              (65)

(இ-ள்.) கல் தரு மாதின் பங்கு உடையார் - மலை பெற்ற மகளைத் தம் இடப்பக்கத்தே கொண்டவரும், கச்சியர் - கச்சிப் பதியை இருப்பிடமாக உடையவரும் ஆகிய என்னுடைய தலைவர், எனது இன்பம் குடையார் - எனது இன்பத்தில் தோயார் (ஆதலால் யான் வருந்துகின்றேன்), அலவா - நண்டே, சிறு அளை யுள் - வெளியே இன்பமாக உலவாது சிறிய வளைக்குள்ளே நாணிப் பதுங்கி, உறைவாய் - வாழ்கின்றாய், (நீயும் என்போல் உன் நாயகனைப் பிரிந்து வாழ்கின்றாயோ?), தென் வளி - தென்றற்காற்றும், கா - சோலைக் காட்சியும், துறை - நீர்த்துறையும், வாய் அலவா - பிரிந்திருப்பாரைத் துன்புறுவிக்கும் காமத்தீயை மூட்டும் பொருள்கள் அல்லவா?, சுற்றும் - நாலாபக்கத்திலும், உடைந்து - சரிந்து, வரும் - தோற்றுகின்ற, திடரே - மணல் மேடே, மிடைந்து - நெருங்கி, வருந்து இடரே - வருந்துகின்ற துன்பமே, தோற்றும் - உன்பால் தோற்றுகின்றது, (நீயும் உன் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாது துன்புறுகின்றனையோ?), முத்தம் பெற்றிடும் - முத்துக்களைத் தோற்றுவித்து வெளியிடுகின்ற, அரு கழை - காண்பதற்கரிய அழகு வாய்ந்த மூங்கிலே! நீ முத்துக்கள் (கண்ணீர்) சிந்துதலால் நீயும் நாயகனைப் பிரிந்திருக்கின்றாய்போலும்! இங்ஙனம் வாய்மூடி வருந்துதலால் பயனென்னை? பேசரியாரை - பேசுதற்கரிய உன் நாயகரை, மருங்கு - உன் பக்கத்தில் வந்து சேருமாறு, அழை - கூவி அழைப்பாயாக; நானும் கூவி யழைப்பேன்.

நாயகனைப் பிரிந்து வருந்துகின்ற தலைவிக்கு எதிரே காணப்படும் உயி ரில் பொருள்களும், உயி ருள் பொருள்களும் தன்னைப்போலவே பிரிந்து வருந்துவன போலத் தோன்றுமாதல்பற்றி, இங்ஙனம் கூறிப் பின் அவற்றிற்கும் தேறுதல் கூறித் தானும் தெளிவு பெறுவாளாதல்பற்றி இங்ஙனம் பாடல் எழுந்தது என்க.

இது,  தலைவி இரங்குதலாகையால் நண்டு, மணல் மேடு, மூங்கில் என்னும் நெய்தல் நிலத்துப் பொருள்களை நோக்கித் தலைவி தன் துன்பத்தைத் தெரிவித்தமையைக் காட்டும், இரங்குதல் நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருளாகலின்.  மூங்கில் குறிஞ்சிநிலக் கருப்பொருள், திணை மயக்கமாக நெய்தல் நிலக் கருப்பொருளாக வந்தது.  மருதநிலத்தைச் சார்ந்தது நெய்தல்நிலம் ஆதலின், கழை என்பதைக் கரும்பு எனப் பொருள் கொண்டு, அம் மருத மயக்கங் கூறினும் அமையும்.