(இ - ள்.) துளரும் சந்தனச் சோலைகள் ஊடு எலாம் - மணத்தை வெளிப்படுத்துகின்ற சந்தனப் பொழில்களினுள்ளேயெல்லாம்; சூழ் ஒளி கிளரும் - தம்மைச் சூழாநின்ற திருமேனி ஒளி விளங்குகின்ற; கின்னரதேவர் - கின்னர வகுப்பைச்சேர்ந்த தேவர்கள்; தம் - தங்களுடைய; வளரும் பூண் முலையாரொடு வைகலால் - வளருகின்ற அணிகலன்களையணிந்த கொங்கைகளையுடைய மங்கையர்களொடு தங்கியிருத்தலால்; தெய்வ நறுங் குளிர் நாற்றமே நளிரும் - தெய்வத்தன்மை பொருந்திய நல்ல குளிர்ச்சி பொருந்திய மணமே எப்பொழுதுங் குளிர்ந்து பரவா நிற்கும். (எ - று.) பொழில்களுக்கள் எல்லாம் கின்னரர்கள், தம் மாதர்களோடு இனபந் துய்த்திருத்தலால் அங்கு எப்பொழுதும் இனிய குளிர்ந்த மணம் வீசிக்கொண்டிருக்கும் என்க. கின்னரர் எனப்பெறுவோர் குதிரை முகமும் மனிதவுடலும் படைத்த ஒரு தெய்வச் சாதியினர். |