பக்கம் : 1001 | | சுயம்பிரபையின் சீற்றமொழியும் திவிட்டன் வணக்கமும் | 1611. | ஆங்கவளொ டீங்குவிளை யாடுநனி நீயான் பூங்கமழு மாடமென தேபுகுவ னென்றாள் தாங்கல னெழுந்துதகை நீலமணி வண்ணன் ஓங்குமுடி சிறடியின் மேலொளிர வைத்தான். | (இ - ள்.) ஆங்கு அவளொடு ஈங்கு விளையாடு நனிநீ - அவ்வாறு உன்னாற் புகழப்பட்ட அவ்விச்சாதரமகளோடு இவ்விடத்தே நீ மிக விளையாடுக, யான் எனது பூங்கமழும் மாடம் புகுவன் என்றாள் - யான் என்னுடைய அழகிய மணங்கமழும் மாடத்தை எய்துவேன் என்று கூறினள், தகை நீலமணிவண்ணன் - பெருமை மிக்க மரகத மணிபோன்ற நிறமுடைய திவிட்டநம்பி, தாங்கலன் எழுந்து - சுயம்பிரபையின் இப்பழிச் சொல்லைப் பொறாதவனாய் எழுந்து, ஓங்குமுடி - புகழ் ஓங்கிய தனது முடிக்கலன், சீறடியின் மேல் ஒளிர - அத்தேவியாரின் சிற்றடிகளிலே பொருந்தி ஒளிரும்படி, வைத்தான் - தாழ்த்தி வணங்கினான், (எ - று.) அவன் ஊடல்தீர்க்க வேறு வழியின்றி, நம்பி பழிபொறானாய்த் தேவியின் அடிகளிலே வீழ்ந்து வணங்கினான் என்க. சிறிது முன்னர் உன்னாலே புகழப்பட்ட விச்சாதரியோடு என்பாள், ஆங்கு அவள் என்று சுட்டினாள் என்க. | (481) | | இதுவுமது | 1612. | மற்றநெடு மான்மகர மாமுடிவ ணங்கக் கற்றனை 1தவப்பெரிது கைதவமு மென்ன உற்றதொர் பிழைப்புடைய னாய்விடி 2னுணர்ந்து முற்றமுறை செய்தருளு மொய்குழலி யென்றான். | (இ - ள்.) மற்று அ நெடுமால் - அத்திவிட்டன், மகர மாமுடி வணங்க - மகரப் பூண் புனைந்த முடிவணங்கா நிற்ப, தவப் பெரிது கைதவமும் கற்றனை என்ன - அதுகண்ட சுயம்பிரபை நீ மிகப் பெரிய வஞ்சனையும் கற்றுள்ளனை என்று கூற, உணர்ந்து உற்றதொர் பிழைப்பு உடையன் ஆய்விடின் - அதுகேட்ட நம்பி ஆராய்ந்து காணுமிடத்து யான் ஏதானும் ஒரு சிறிய குற்றமுடையேனாய்க் காணப்பட்டாலும், முற்றமுறை செய்தருளு - முழுதும் என்னை ஒறுத்தருள்க, மொய் குழலி - செறிந்த அளகமுடையோய், என்றான் - என்று வேண்டினன், (எ - று.) | |
| (பாடம்) 1 யினிப் பெரிது. 2 னுணர்ந்தே. | | |
|
|