பக்கம் : 1003
 

     (இ - ள்.) பேதைமை கலந்து பிறழ் கண்ணினொடு - அறியாமை மெய்ப்பட்டுப்
புரளுகின்ற கண்களோடே, ஒடுங்கும் மாதவனை - அச்சத்தாலே ஒடுங்குகின்ற
பார்ப்பனனை, போதுவிரிதேம் குழலி - மலர் இதழ்கள் விரிந்து தேன் கமழ்கின்ற
அளகத்தையுடைய சுயம்பிரபை, நோக்கி - பார்த்து, மணி வாய்முறுவல் தோன்றி - பவளம்
போன்ற தன் வாயிடத்தே புன்முறுவல் தோன்றாநிற்ப, இவனை - இப்பார்ப்பானை, நீர் -
நீங்கள், கோதைகளில் யாத்து - மலர்மாலைகளாலே தளையிட்டு, கொணர்மின் - கொண்டு
வாருங்கள், என்றாள் - என்று பணித்துப் பின்னர், பூம்பொழில் அணைந்தாள் - நம்பிநின்ற
பொழிலின்கட் சென்றாள், (எ - று.)

     அறியாமை வெளிப்பட்டுத் தோன்றாநின்ற கண்களோடே அஞ்சி ஒடுங்கும்
அப்பார்ப்பனைத் தேவி சென்று நோக்கி முறுவல் தோன்ற இவனைக் கோதையாலே
யாத்துக் கொணர்மின் என்று பணித்துப் பொழிலிடத்தே புக்காள் என்க.

(484)

 

தேவி ஊடல் தீர்ந்தமை முறுவற் குறிப்பானுணர்ந்து
நம்பி தழீஇக் கோடல்

1615. மன்னவன் மருட்டமணி யாழ்மழலை மாதர்
முன்னிய முகத்துமுறு வற்கதிர் முகிழ்ப்ப
இன்னவருள் பெற்றன னினிப்பெரிது மென்னா
அன்னமனை யாளையணி 1மார்பினி லணைத்தான்.
 
     (இ - ள்.) மன்னவன் - திவிட்டநம்பி, மருட்ட - தனது பணிமொழி களாலே
சுயம்பிரபையை மயக்குறுத்த, மணி யாழ் மழலை மாதர் - அழகிய யாழ் இசைபோலும்
இனிய மழலை மொழிமிழற்றும் அழகியாகிய சுயம்பிரபையினது, முன்னிய முகத்து - ஊடல்
தீர்தலைக் கருதிய திருமுகத்தின் கண்ணே, முறுவல் கதிர் முகிழ்ப்ப - புன்முறுவல் ஒளி
சிறிதே தோன்றா நிற்ப, இனிப் பெரிதும் இன்ன அருள் பெற்றனன் என்னா - இனி, யான்
மிகவும் இத்தகைய பேரருளைப் பெற்றேன் என்று மகிழ்ந்து, அன்னம் அனையாளை -
அன்னப்பறவை போன்ற அப்பெருந் தேவியை, அணிமார்பினில் அணைத்தான் - அழகிய
தனது மார்பிடத்தே பொருந்துமாறு அங்கைகளாலே தழீஇக் கொண்டான், (எ - று.)

     நம்பி தன் பணிமொழியாலே நங்கையை மருட்ட, நங்கை முகத்தே முறுவற் கதிர்
சிறிதே முகிழ்ப்ப, இத்தகைய அருளை யான் பெற்றேன் என்று நம்பி மகிழ்ந்து, அது
வாயிலாய் அன்னமனையாளைத் தன் மார்பிடத்தே அணைத்தான் என்க.

     “பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
     பெண்மை யுடைக்கும் படை“

     (திருக் - 1258)என்னும் குறளை நோக்குக.

(485)


      (பாடம்) 1 மார்பினுள்.