பக்கம் : 1004
 

நம்பி விதூடகனைத் தளைவிடுவிக்க நங்கையை வேண்டல

1616. போதிவ ரலங்கலொடு பூண்முலைஞெ முங்கக்
காதலன் முயங்குபு கலந்தினி திருந்து
மாதவனு மேதமில னாதலின்ம டந்தாய்
தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான்.
 
     (இ - ள்.) போது இவர் அலங்கலொடு பூண்முலைஞெமுங்க - இதழ்கள் விரிகின்ற
மலர்மாலையோடே, அணிகலன்களையுடைய முலைகள் அழுந்துமாறு, காதலன் - முறுகிய
காதலுடையானாகிய திவிட்டமன்னன், முயங்குபு - சுயம்பிரபையைத் தழீஇ, கலந்து -
பொருந்தி, இனிது இருந்து - அவ்வின்பத்திலே வயமிழந்து நெடிது இருந்த பின்னர்,
மடந்தாய் - நங்கையே, மாதவனும் - அப்பார்ப்பன மகனும், ஏதம் இலன் - தீங்கு ஒன்றும்
செய்திலன், ஆதலின் - ஆதலாலே, தீதுபடு சீற்றம் - எம்போன்றார்க்குத் தீமை தருவதாய
உனது சினத்தை, ஒழி - ஆறக்கடவாய், என்று - என்று பணிமொழி கூறி, தெளிவித்தான் -
அவள் ஊடலை நன்கு தீர்த்தனன், (எ - று.)

     வாயில் பெற்றுத் தழீஇய நம்பி மேலும் மாதவனும் தீதிலன் ஆதலின் மடந்தாய்
தீதுபடு சீற்றமொழி என்று பணிமொழி கூறி ஊடலை நன்கு தீர்த்தான் என்க.

(486)

 

நங்கை விதூடகனைத் தளை விடுவித்தலும்
அவன் ஆடல் பாடல் இயற்றலும்

1617. இட்டதளை 1தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான்.
 
     (இ - ள்.) இட்ட தளை தம்மொடு - காலிலே இடப்பட்ட மாலையாகிய விலங்கோடே,
தோளும் இடைவீக்கிக் கட்டி விடு பூம்பிணையல் - இரண்டு கைகள் இடையேயும் இறுகக்
கட்டப்பட்ட பூமாலையாகிய தளையையும், கைவிடலும் - உழைக்கல மகளிர்கள் தேவியின்
குறிப்பறிந்து அகற்றி விட்டவுடனே, மெய்யுள் ஒட்டிவிடு காதலொடு- உடலோடே
ஒட்டிவிடுவதைப் போன்றதோர் அன்புடைமையோடே, வந்து - தேவியின் முன்னர் வந்து,
உருவுகொண்டு - கோலங்கொண்டு, பட்ட பல பாடலினோடு ஆடல்பல செய்தான் -
சுவைபட்ட பலவாகிய இசைப்பாட்டைப் பாடுதலோடே பலவேறு கூத்துக்களையும்
ஆடலானான், (எ - று.)
 

     (பாடம்) 1 யோடுமிரு.