பக்கம் : 1006
 
 
1620. வேண்டு மேமனம் வேண்டுமே
பூண்ட பொன்னணி மார்பினாய்
நீண்ட மாங்கனி 1நேர்தொறும்
வேண்டு மேமனம் வேண்டுமே.
 
     (இ - ள்.) பூண்ட பொன் அணி மார்பினாய் - பூணப்பட்ட பொன்னாலாய
அணிகலன்களை உடைய மார்புடைய பெருந்தேவியே, நீண்ட மாங்கனி நேர்தொறும் -
உயர்ந்துள்ள தேமாவின் கனிகளைக் காணுந்தோறும், வேண்டுமே, மனம் வேண்டுமே -
அவற்றைப் பெரிதும் என் மனம் விரும்பாநிற்கும், வேண்டுமே மனம் வேண்டுமே -
அவற்றைப் பறித்துக் கொடு என்று என்னைப் பெரிதும் அம்மனம் இரவாநிற்கும்,
(எ - று.)

     மார்பினாய்! நீண்டமாங்கனி காண்டொறும், என்மனம் அவற்றைப் பெரிதும்
விரும்பும், விரும்பி அவற்றைப் பறித்துத்தருக! என என்னை இரவாநிற்கும்; என்றான்
என்க.

(490)

 

பாரிசாத காமவல்லி திருமணம்

வேறு

1621. இன்னன பாடி யாட 2வீர்ங்கனி பலவுங் கூவி
முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார்.
 
     இதுமுதல் 8 செய்யுள் ஒரு தொடர்
     பாரிசாத காமவல்லி மணம் உரைப்பன

     (இ - ள்.) இன்னன - இவை போல்வன பலவும், பாடி ஆட - பாடிக் கொண்டு
அவ்விதூடகன் கூத்தாடுதல் செய்ய, ஈர்ங்கனி பலவும் - தேவி ஈரிய கனிகள் பலவற்றையும்,
கூவி - வரவழைத்து, முன்னவன் - பார்ப்பன னாகிய அவ்விதூடகன், ஆர ஊட்டி -
ஆசைதீர உண்ணும்படி செய்து, முறுவலோடு - அவன் அவாவுடன் உண்ணுதலை நோக்கிப்
புன்முறுவலுடன், அமர்ந்த பின்னை - அங்கு வீற்றிருந்த பின்னர்,

     மன்னிய பாரிசாதம் - நிலைபெற்ற பாரிசாத மரத்தை, மணமகனாக நாட்டி -
மணமகனாக வைத்து, அங்காமவல்லி கன்னி நாட்டி - அழகிய காமவல்லியை மணமகளாக
வைத்து, கடிவினை தொடங்கலுற்றார் - அத்திருமண மக்கட்குத் திருமண விழா நிகழ்த்தத்
தொடங்கினார், (எ - று.)
 

. (பாடம்) 1 காண்டொறும். 2 இருங்கனி.