பக்கம் : 1008
 

     வளை கொம்போடே முழங்க, முரசம் ஆர்ப்ப, இசை பரந்தபோது, நம்பியின் ஏனைத்
தேவியர் அனைவரும், சுயம்பிரபையின் குறிப்பறிந்து, ஆங்கே வந்து கூடினர், என்க.

(493)

 
1624. செய்கய லுருவ வாட்கட்
     டேவிதன் குறிப்பிற் சேர்ந்த
மங்கையர் வனப்பு நோக்கி
     மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப்
பொங்கிய விளமென் கொங்கை
     மகளிர்தம் புருவ வில்லால்
அங்கய னெடுங்க ணென்னும்
     பகழியா லழுத்தப் பட்டான்.
 
     (இ - ள்.) செங்கயல் உருவ வாட்கண் - செவ்விய கயல் மீன் போன்ற
வடிவினையுடைய வாள்போன்ற கண்களையுடைய, தேவி தன் குறிப்பில் -
கோப்பெருந்தேவியாகிய சுயம் பிரபையின் குறிப்பினாலே, சேர்ந்த - ஆங்கு வந்தெய்திய,
மங்கையர் - தன் மனைவியரின், வனப்பு நோக்கி - அழகினைப்பார்த்து, மணிவண்ணன்
மகிழ்ந்து - திவிட்டநம்பி மகிழ்ச்சி மிக்கு, பொங்கிய விளமென் கொங்கை - பரிய
இளையவாய மெல்லிய முலைகளை யுடைய,

     அம் மகளிர் தம் புருவவில்லால் - அம்மகளிர்களுடைய புருவமாகிய வில்லாலே
ஏவப்பட்ட, அம்கயல் நெடுங்கண் என்னும் - அழகிய கயல்போன்ற நீண்ட கண்கள்
என்கிற, பகழியால் - அம்புகளாலே, அழுத்தப்பட்டான் - ஏறுண்டான், (எ - று.)

     பெருந்தேவியின் குறிப்புண்மையால், ஆண்டு வந்து குழுமிய தேவி மாரின்
அழகினை நோக்கி மகிழ்ந்த நம்பி, அவர்கள் கண்ணம்பாலே ஏறுண்டான் என்க.
 

 (494)

 
1625. குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையால்
புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி 1பொதிந்த வாட்கண்
இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான்.
 
 

     (பாடம்) 1 பரந்த.